ஓபிஎஸ் ஒதுக்கப்படவில்லை, அவரை கைவிட மாட்டோம்- டிடிவி தினகரன்
திமுகவை ஆட்சிக்கட்டிலிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக திமுகவை எதிர்க்கின்ற கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ளோம். திமுகவை வீழ்த்துவதற்காக பழைய பங்காளி சண்டைகளை ஓரமாக வைத்துவிட்டு கூட்டணியில் ஒன்றாக செயல்படலாம். அதன்பிறகு எங்கள் பங்காளி சண்டையை தொடர்வோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை வீழ்த்துவதற்காக திமுகவை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்கிறோம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமினில் வெளிவந்து அமைச்சராக இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் பொன்முடி பெண்களைப் பற்றி இழிவாக பேசியதற்கு நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது. துரைமுருகனை விடுதலை செய்தது தவறு என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது.
திமுக ஆட்சியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பயப்படுவதற்கான காலமாக உள்ளது. ஏனெனில், பட்டிதொட்டி எல்லாம் போதை கலாச்சாரம், போதை சாக்லேட், போதை மாத்திரைகள் விற்கப்படுகிறது. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறு பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. கூலிப்படைகளின் ஆதிக்கத்தால் 5000-க்கும், பத்தாயிரத்திற்கு யாரை வேண்டுமானாலும் கொலை செய்கின்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நான்கு ஆண்டுகள் முடியும் தருவாயிலும் நிறைவேற்றாமல் திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சி முடிவுக்கு வந்தால்தான் மக்களுக்கு நிம்மதி வரும். 2026 மார்ச் மாதத்துக்கு பிறகு மக்களாட்சி அமைந்த பிறகு டெல்டா மாவட்டங்களில் பருவம்தவறி பெய்த மழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். திமுக தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்போம் என்று சொன்னார்கள். அதற்கெல்லாம் போராட்டம் நடத்தியவர்கள் இன்று ஆட்சிக்கு வந்த பிறகு எல்லோரையும் மறந்துவிட்டார்கள். இதற்கெல்லாம் பொதுமக்கள் தக்க பதிலடி தருவார்கள். இன்றைக்கு ஒரே இலக்கு திமுக என்ற தீயசக்தியை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும், திமுகவை எதிர்க்கின்ற கட்சிகள் ஓரணியில் இருக்க வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ளோம்.
திமுகவை வீழ்த்துவதற்காக பழைய பங்காளி சண்டைகளை ஓரமாக வைத்துவிட்டு கூட்டணியில் ஒன்றாக செயல்படலாம். அதன்பிறகு எங்கள் பங்காளி சண்டையை தொடர்வோம் என்பது எங்கள் நிலைப்பாடு. ஓபிஎஸ் ஒதுக்கப்படவில்லை. அவரின் இடம் அப்படியே உள்ளது. அவரை நாங்கள் கைவிட மாட்டோம். திருமாவளவன் தினந்தோறும் ஒரு தகவல் சொல்லி வருகிறார். நேற்று என்ன சொன்னோம், இன்று என்ன சொன்னோம் என்று அவருக்கே தெரியவில்லை. காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்கிறார். விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்தில் 66 பேர் பலியான விவகாரத்தில் பட்டியலின மக்களுக்காக போராடும் திருமாவளவன் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று சொல்லவில்லை. திருமாவளவனின் போக்கு வித்தியாசமாக போய்க்கொண்டு உள்ளது” என்றார்.