"திமுக ஆட்சியில் அரசியல் தலைவர்கள் முதல் யாருக்கும் பாதுகாப்பு இல்லை" - டிடிவி தினகரன்
அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படுகின்ற சண்டை பிரச்னைகளை தீர்ப்பதற்கு, ஊர் பெரியவர்கள் எவ்வாறு தேவைப்படுகிறார்களோ, அதேபோலத்தான் எங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மோடி, அமித்ஷா ஆகியோர் செயல்பட்டனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்பி உதயகுமாரை ஆதரித்து ,அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார். திருமங்கலம் தேவர் திடல் முன்பு பிரச்சாரத்தில் பேசிய டிடிவி தினகரன், “அண்ணன், தம்பிகளுக்குள் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். ஆகையால் எங்கள் கட்சிகளுக்குள் பிரிவினை ஏற்பட்டது. ஒரு ஊரில் அண்ணன் தம்பிகளுக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டால் ,அங்குள்ள பெரியவர்கள் கூடி பேசி ஒன்றிணைப்பர். அதுபோல அண்ணன் தம்பி எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதை அமித்ஷா, மோடி ஆகியோர் கூடி பேசி ஒன்றிணைத்துள்ளனர் .நானும் உதயகுமாரும் ஒன்றிணைய முடியுமா ?ஆகையால் பெரியோர்களான அமித்ஷா, மோடி ஆகிய இருவர் எங்களை அழைத்து பேசி ஒன்றிணைத்துள்ளனர். கட்சிகள் என்று வரும்போது ஒருவருக்கொருவருக்குள் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் . எங்களுக்குள் ஏதாவது பிரிவினை என்றால் நான் எப்படி உதயகுமாருக்கு வாக்கு சேகரிக்க வருவேன். பாஜகவிடம் அதிமுக அடிமை என்று சொல்கின்றனர். அது தவறு. திமுக ஆட்சியில் அரசியல் தலைவர்கள் முதல் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கூலிப்படையினர் மூலம் யாரையும் கொலை செய்யும் நிலை உள்ளது” என்றார்.