×

ஆக.6ல் கூடுகிறது அமமுக பொதுக்குழு கூட்டம்
 

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி,  கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.  சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் தினகரனை  சந்தித்து அவருடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தார்.  அத்துடன் கோடநாடு கொலை வழக்கு விசாரணை விரிவுபடுத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி ஓபிஎஸ் அறிவித்துள்ள போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற ஆகஸ்ட் 6ஆம்  தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் சென்னை மதுரவாயலில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு, ஓபிஎஸ் அணியுடன் இணைந்து அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.