திருச்சியில் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் அமித்ஷா
வருகிற 5-ம் தேதி திருச்சி மன்னார்புரம் ராணுவ திடலில் நடைபெறும் பிரம்மாண்ட பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இரண்டு முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்காக இங்கு கூடியுள்ளோம். 2-ந் தேதி நாளை இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் சென்னைக்கு வருகை தருகிறார். காலை 10 மணிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். மாலை 4 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார். வருகிற 4-ம் தேதி மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை காரைக்குடி பைபாஸ் சாலையில் பிரமாண்ட திடலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் அமித்ஷா கலந்து கொண்டு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். அரசியல் ரீதியாகவும் அவர் பேச உள்ளார். 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். 5-ந் தேதி காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு 11 மணிக்கு 2 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் மோடி பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார்.
நயினார் நாகேந்திரன் யாத்திரை நிறைவு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வது குறித்து தகவல் இல்லை. அழைப்பு குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவிப்பார். பொங்கலுக்கு பிறகு எங்களது செயல்பாடுகள் வேகமெடுக்கும். பிரதமர் அமித்ஷா பியூஸ் கோயல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கலந்து கொள்ள உள்ளனர். தமிழக அரசியலில் காங்கிரஸ் கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் ஏற்பட்டிருக்கும் மோதல். இது நேரடி மோதலாகவே மாறி இருக்கிறது மாணிக்கம் தாகூர் நேற்று, X பதிவில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை இயக்கம் ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். 1 ரூபாய்க்கு மத்திய அரசு 19 பைசா கொடுக்கிறது. தமிழ்நாடுக்கு அதே உத்தர பிரதேசத்திற்கு 2.60 ரூபாய் கொடுக்கிறது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் சொல்லியுள்ளார். சாதாரண மக்கள் கூட தவறான கருத்தை தெரிவிக்கலாம் ஆனால் இப்படி பொறுப்பில் இருக்கும் எம்பி எம்எல்ஏக்கள், அரசியல் அமைப்பின் உறுதிமொழி எடுக்கிறவர்கள் தவறான தகவலை சொன்னால் அவர்கள் மீது வழக்கு போட வேண்டும். பொய் சொல்வதற்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு சு.வெங்கடேசனுக்கு தான் கொடுக்க வேண்டும்” என்றார்.