×

திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு சென்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்

 

திருமணம் முடிந்த கையோடு அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு திருமண சீர்வரிசையாக விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மணி.

புதுச்சேரி அடுத்த தொண்டமாநத்தம் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆம்புலன்ஸ் மணிகண்டன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகிறார். இவருக்கும் பாத்திமா  என்பவருக்கும் இன்று திருமணம் நடந்தது. தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் என்றாலே வெகுவிமர்ச்சையாக கொண்டாடப்படுவதும், தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பதும் வழக்கம். தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கூடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் இந்நிலையில்‌ மணிகண்டன் தனது திருமணத்தை எளிய முறையில்  குலதெய்வம் திரவுபதி அம்மன் கோயிலில் செய்து கொண்டார். மேலும் சீர்வரிசையாக கொடுக்கும் தங்கம், வெள்ளி, வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றிற்கு பதிலாக மாணவர்களின் உடல் நலன் கருதி விளையாட்டு உபகரணங்களை சீர்வரிசையாக அவரது நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து பெற்று அதனை அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு திருமண சீர்வரிசையாக வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து ஆம்புலனஸ் மணிகண்டன் கூறுகையில், “இன்று தான் திருமணம் செய்துள்ளேன. நான் அபதுல்கலாம் நல்வழியிலும், கொள்கையிலும், இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகிறேன். இன்று என திருமண நாளில் என்ன செய்யலாம் என யோசித்தேன். சிறுவயதில் இதுபோன்ற விளையாட்டு உபகரணங்கள் கிடைக்கவில்லை. மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என அப்துல்கலாம் கூறியுள்ளார். ஆகையால் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய மகிழ்ச்சி. இன்றைக்கு எனக்கு திருமணமாகி 50 ஆண்டுகள் கடந்தது போல் உள்ளது. மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் என்னுடைய சேவை ஆம்புலன்ஸ் தான். இதன் மூலம் 6000 உயிர்களுக்கு மேல் காப்பாற்றியுள்ளேன்” என்றார்.