×

"அனைத்து பொருட்களும் ஒரே தவணையில்" - ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

 

இந்தியாவில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் உச்சம் பெற்றது. இதையடுத்து மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் உணவு இல்லாமல் அல்லல்பட்டனர். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவ்வாறு திரும்பியவர்கள் ஊருக்குச் செல்லும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மத்திய அரசு கடும் விமர்சனத்துக்குள்ளானது.

அதற்குப் பின்னர் தான் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின்படி ரேஷன் கடைகள் மூலமாக 80 கோடி பேருக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவு தானிங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மானிய விலை உணவு தானியத்துக்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தத் திட்டத்தை நவம்பர் 30 ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கும் எண்ணம் இல்லை என மத்திய உணவுத் துறை என அறிவித்தது.

இதற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. கொரோனா பரவல் குறைந்தாலும் மக்களின் பொருளாதாரம் பெரியளவில் உயரவில்லை. ஆகவே இலவச ரேஷன் திட்டத்தை நீட்டிக்க வலியுறுத்தின. இதற்குப் பின்னர் மத்திய அரசு அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டது. இச்சூழலில் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.