×

"சென்னையின் 22 சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டுக்கு வந்தன" - சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

 

சென்னையின் 22 சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் பெய்த கனமழையால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் கடந்த அக்டோபர் 25 முதல் நவம்பர் 16 வரை 697.80 மி.மீ. மழை பெய்துள்ளது. அக்டோபர் 25 முதல் நவம்பர் 14 வரை முறிந்து விழுந்த 579 மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 778 பகுதிகளில் 750 இடங்களில் தேங்கிய மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது; மீதமுள்ள இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தில் தற்போதைய நிலவரத்தை சென்னை போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ளது. மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தின் படி,  பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தியாகராயநகர் - பசுல்லா  சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.  இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலையிலிருந்து நோக்கி செல்லும் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை அபிபுல்லா சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது.