×

பள்ளிக்கூடம் அருகே மதுபான பார்- போராட்டம் செய்த தவெகவினர் குண்டுக்கட்டாக கைது‌

 

கும்பகோணத்தில் கடந்த மாதம் திறக்கப்பட்ட தனியார் மது கடையை மூட வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர் இன்று கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகில் தனியார் மதுபான கடை கடந்த மாதம் திறக்கப்பட்டது .இந்த கடையை மூட வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர் . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழக வெற்றி கழகத்தின் 200 நபர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்னதாகவே காவல் துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.

அப்போது தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் வினோத் ரவி சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினார் . காவல் ஆய்வாளர் அவரை கைது செய்து வாகனத்தில்  ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்து மல்லுக்கட்டவே இருவருக்கும் இடையே இழுபறி நீடித்தது. சக காவல்துறையினர் வினோத் ரவியை இழுத்து காவல் துறையினரின் வாகனத்தில் ஏற்றினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனிடையே ஆர்ப்பாட்டத்திற்கு வந்த நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினர் தன்னை நோக்கி வருவதை அறிந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தான் கழுத்தில் அணிந்திருந்த துண்டை மறைத்து காவல் துறையினர் கைதில் இருந்து  தப்பினார்.