பள்ளிக்கு கிளம்பிய மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உடையாம்புளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகனின் மகள் பால கிருஷ்ணவேணி (14). இவர் மாறாந்தை அரசு மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். காலையில் மாணவி பால கிருஷ்ணவேணி சீருடை அணிந்து வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பினார். திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் மாணவியை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி பால கிருஷ்ணவேணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆலங்குளம் போலீசார் உயிரிழந்த மாணவியின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்த மாணவி பால கிருஷ்ணவேணிக்கு சிறுவயதில் இதயத்தில் பிரச்சனை இருந்தாக கூறப்படுகிறது. அதற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.