×

பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘அக்ஷயம் 365’ - கைகொடுத்த அமெரிக்க நிறுவனத் தலைவர்!

 

சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை டவர்ஸ் மற்றும் MUDRA OOH நிறுவனம் இணைந்து ‘அக்ஷயம் 365’ என்னும் திட்டத்தின் மூலம் சென்னை பாண்டி பஜாரில் கடந்த இரண்டு மாதங்களில் 10,000 நபர்களுக்கு மேல்  மதிய உணவு அளித்து வருகின்றனர்.பட்டினியை முற்றிலுமாக விரட்டுவது இந்த திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும்.

இந்த புதுமையான திட்டத்தை செயல்படுத்த வசதியாக தி.நகர் பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு அருகே சென்னை மாநகராட்சி இடம் ஒதுக்கியது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில் தினமும் மதியம் 12 மணிக்கு உணவு வழங்கி வந்தனர்.தினமும் 100 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், லெமன் சாதம் போன்றவை வழங்கப்பட்டது.

இந்த திட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது,  பசியோடு இருப்பவர்கள் உணவு வாங்கி சாப்பிடும்போது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படு கிறது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இவர்களின் சேவையை அறிந்த அமெரிக்காவை சேர்ந்த Agilysys Inc என்னும் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் ஸ்ரீனிவாசன், இத்திட்டம் மேலும் சிறப்பாக  நடைபெற பத்து லட்சம் ரூபாயை இன்று நன்கொடையாக வழங்கினார்.

இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை டவர்ஸ் நிர்வாகிகள் வெங்கடேஷ், ஷாபு, கோபால், ஷோபா, சுமைதா, நிர்மலா மற்றும் Mudra OOH நிறுவனத்தின் பங்குதாரர்கள் அனந்த கிருஷ்ணன்,  சரண்யா ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.