×

"நாடாளுமன்றத்தில் வைகோ" ஆங்கில நூல் வெளியீடு: டெல்லியில் ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொண்டார்!

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரைகளின் தொகுப்பான "நாடாளுமன்றத்தில் வைகோ" என்ற ஆங்கிலப் புத்தகம் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இன்று மாலை வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட, அதன் முதல் பிரதியை உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொண்டார்.

‘இந்தியா’ கூட்டணியின் முன்னணித் தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.கள் மஹூவா மொய்த்ரா, சகாரிகா கோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி. ராஜா, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி பேச்சு

புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய ராகுல் காந்தி, நாட்டின் தற்போதைய கல்விச் சூழல் மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக் கடுமையாக சாடினார். அப்போது அவர், "இந்தியாவில் தற்போது ஒரு விசித்திரமான சூழல் நிலவுகிறது. போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளால் மாணவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து நியாயம் கேட்டு வீதிகளில் இறங்கிப் போராடி வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால், மறுபுறம் பிரதமர் மோடியோ அவர்களை 'மன்னிப்பது' போல பேசி வருகிறார். இந்தியாவின் எதிர்காலமாகத் திகழும் மாணவர்களை மன்னிப்பதற்கு பிரதமர் யார்? அந்த உரிமையை அவருக்கு யார் கொடுத்தது? மாணவர்களுக்கு தேவை பிரதமர் அளிக்கும் மன்னிப்பு அல்ல, அரசாங்கம் மன்னிப்பு கேட்பதே ஆகும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட பல மாநிலங்களின் ஒன்றியம். ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒற்றை தன்மையைத் திணிக்க முயல்கிறது. தமிழ் மக்களின் கலாச்சாரம், வரலாறு, மொழி ஆகியவற்றுக்கு மதிப்பளிக்காத ஒரு போக்கை அவர்கள் கொண்டுள்ளனர். இதற்கு எதிரானதே நமது போராட்டம்" என்றும் அவர் கூறினார்.

மேலும், வைகோ குறித்து பேசிய ராகுல் காந்தி, "வைகோ என்னிடம் வந்து இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் அழைத்த போது என்னால் மறுக்க முடியவில்லை. அவருக்கும் எனக்குமான உறவும் மரியாதையும் அத்தகையது. தனது வாழ்நாளை தன் கொள்கைகளுக்காகவும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் அர்ப்பணித்த வைகோவின் நாடாளுமன்ற உரைகள் இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கிய ஆவணம்" என்றார்.

அகிலேஷ் யாதவ் பேச்சு

புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு பேசிய அகிலேஷ் யாதவ், மாநிலங்களின் உரிமைகளுக்காக வைகோ நாடாளுமன்றத்தில் எழுப்பிய குரலை நினைவு கூர்ந்தார். அப்போது அவர், "நாடாளுமன்றத்தின் சுவர்கள் இன்றும் எதிரொலிக்கும் அளவிற்கு பிராந்திய மொழிகளின் உரிமைக்காகவும், கூட்டாட்சித் தத்துவத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் வைகோ. இந்திய அரசியலமைப்பை காக்கப் போராடும் ‘இந்தியா’ கூட்டணிக்கு அவரது நாடாளுமன்ற உரைகள் ஒரு வழிகாட்டியாகத் திகழும்" என்றார்.

துரை வைகோ

நிகழ்ச்சியில் பேசிய மதிமுகவின் முதன்மைச் செயலாளரும், எம்பியுமான துரை வைகோ, தனது தந்தையின் நாடாளுமன்ற பயணத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அப்போது அவர், "இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். எனது தந்தை வைகோ சுமார் மூன்று தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் மிகவும் மதிக்கத்தக்க நாடாளுமன்றவாதிகளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். அவரது அனல் பறக்கும் உரைகளை ஆவணப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டிருப்பது எங்களுக்குக் கிடைத்த பெருமை" என்றார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வைகோ கடுமையான போராட்டங்களை நடத்தியிருந்தாலும், ராகுல் காந்தி இந்த புத்தகத்தை வெளியிட்டிருப்பது தேசிய அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன், ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமையை பறைசாற்றும் ஒரு தளமாகவும் இந்த விழா அமைந்தது.

இவர்களுடன் தவெக சார்பில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றுள்ளார்.திமுக கூட்டணியிலிருந்து விலகிய மதிமுக, தவெகவுக்கு ஆதரவளித்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து புத்தக வெளியீட்டு விழாவுக்கு வைகோ அழைப்பு விடுத்திருந்தார்.இந்த விழாவில், முதல்வர் விஜய் பங்கேற்க முடியாத காரணத்தால், அவரின் பிரதிநிதியாக அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டுள்ளார்.