இளைஞர் அஜித் கொலை வழக்கு : மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட்..!!
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் வழக்கில் மானாமதுரை டி.எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர், விசாரணையின்போது போலீஸ் அடித்ததில் பரிதபமாக உயிரிழந்தார். விசாரணையின் போது கைதி உயிரிழந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், முதல்கட்டமாக திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வலிப்பு வந்து அஜித்குமார் உயிரிழந்ததாக போலீஸார் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ள நிலையில், போலீஸார் இளைஞரை கண்மூடித்தமான தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் அஜித் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இளைஞர் அஜித் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். தொடர்ந்து சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் எஸ்.பி., சந்தேஷுக்கு சிவகங்கை எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு மாற்றப்பட்டதுடன் உடனடியாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வழக்கின் போக்கு தீவிரமடைந்து வரும் நிலையில் இளைஞர் அஜித் மரண வழக்கில் மானாமதுரை டி.எஸ்.பி.சண்முகசுந்தரம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.