×

சர்வதேச கார் பந்தயத்தில் அஜித்குமார்: கொடியசைத்து தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்!

 

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், உலகளாவிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், செப்டம்பர் 10 முதல் 17 வரை லண்டனில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இப்பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில், இங்கிலாந்தின் புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ அவர் நேரில் பார்வையிடத் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' (Motor Sports City) அமைக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மைதானத்தின் அதிநவீன உள்கட்டமைப்பு, சர்வதேச தரநிலைகள் மற்றும் விளையாட்டுச் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக உயர்மட்டக் குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த அனுபவம் தமிழ்நாட்டில் அமையவிருக்கும் புதிய ரேசிங் மைதானத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தில் நடைபெறும் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச கார் பந்தயத்தையும் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார். இந்த சில்வர்ஸ்டோன் கார் பந்தயத் தொடரில், 'அஜித் ரெட் ஆண்ட் ரேஸிங்' (Ajith-RedAnt Racing) அணியின் சார்பாகத் தமிழ்நாட்டின் முன்னணி திரை நட்சத்திரமும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமார் களம் காண்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் சர்வதேச அளவில் பங்கேற்கும் இந்த அதிவேகப் போட்டியைத் தான், தற்போது முதலமைச்சர் விஜய் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சில்வர்ஸ்டோன் கார் பந்தய அமைப்பும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாகப் பாக்ஸ் ஆபீஸ் போட்டியாளர்களாகவும், கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இரு பெரும் ஆளுமைகளாக விளங்கும் விஜய் மற்றும் அஜித்குமார் லண்டனில் சந்திப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்பையும் எகிறச் செய்துள்ளது.