×

பரபரப்பான திருப்பம்: அஜித்குமார் கொலை வழக்கில் நேரில் ஆஜராக நிகிதாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது நிகிதா என்பவர் தனது நகைகளை அஜித்குமார் திருவிட்டதாக போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி தனிப்படை காவலர்களின் விசாரணையின்போது, அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதிலேயே அவர் உயிரிழந்ததாக அஜித்குமாரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்தன.

அஜித்குமாரின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், மற்றும் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் 6 போலீசார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டிஎஸ்பி உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 4 தனிப்படை போலீசார் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை அண்மையில் விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, "செய்யாத குற்றத்திற்காக ஒருவரை அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். புகார் அளித்தவர் பொய்யான புகார் அளித்ததாக சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. புகாரளித்த நபர் மீது சிபிஐ விசாரணை மேற்கொண்டு உள்ளதா?" என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் புகார் அளித்த மதுரையை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி நிகிதாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

அஜித்குமார் கொலை வழக்கில் விசாரணைக்காக நிகிதா நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியிருப்பது இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.