×

எகிறிய விமான கட்டணம்; சென்னை டூ தூத்துக்குடிக்கு ரூ.17,000..!

 

நாடு முழுவதும் வரும் திங்கள்கிழமை (செப்.14), விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை திங்கள்கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் சென்னையில் வசித்து வரும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள், தங்கள் சொந்த ஊருக்குக்கு சென்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். பெரும்பாலானோர் இன்றே தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுவிட்டனர்.

ஏற்கனவே ரயில், பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்து விட்டதால் சிறப்பு ரயில்களிலும், கூடுதல் பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சற்று வசதி படைத்தவர்கள் விமானப் பயணத்தை தேர்ந்தெடுத்து வருகின்றனர். ஆனால், விமானக் கட்டணமோ ராக்கெட் வேகத்தில் உயரந்துள்ளது. குறிப்பாக, கடைசி நேர முன்பதிவுகளில் பல்வேறு வழித்தடங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்துக்கு வழக்கமான கட்டணம் ரூ.6,991 ஆக உள்ள நிலையில், இன்று ரூ.17,153 வரை உயர்ந்துள்ளது. சென்னை–மதுரை வழித்தடத்தில் வழக்கமாக ரூ.5393ல் ஆக இருந்த கட்டணம், இன்று ரூ.19,761 வரை அதிகரித்துள்ளது.

சென்னை–திருச்சி விமான கட்டணம் ரூ.4,646-ல் இருந்து ரூ.14,673 ஆகவும், சென்னை–கோவை விமான கட்டணம் ரூ.4966-ல் இருந்து ரூ.16496 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய விமானங்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

உதாரணமாக, சென்னை–பெங்களூரு விமானக் கட்டணம் ரூ.3,801 இருந்த நிலையில், இன்று ரூ.17,993 வரை உயர்ந்துள்ளது. சென்னை–ஹைதராபாத் வழித்தடத்தில் ரூ.4,467 ஆக இருந்த கட்டணம், இன்று ரூ.18,207 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, நீண்டதூர விமானப் பயணத்துக்கான கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னை–டெல்லி விமானத்தில் வழக்கமான கட்டணம் ரூ.8,943 இருந்த நிலையில், இன்று ரூ.31,047 வரை உயர்ந்துள்ளது. சென்னை–மும்பை வழித்தடத்தில் ரூ.6,516 ஆக இருந்த விமானக் கட்டணம் இன்று ரூ.24,592 ஆகவும், சென்னை–கொல்கத்தா வழித்தடத்தில் ரூ.6,250 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.20,716 ஆக அதிகரித்துள்ளது.

விமானக் கட்டணத்தின் இந்த திடீர் உயர்வால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மக்களின் அவசரத்தையும், தேவையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, வரன்முறை இல்லாமல் விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.