சென்னையை ஸ்தம்பிக்க வைத்த காற்று மாசு... கடந்த ஆண்டை விட அதிகம்..!
தீபாவளிக்கு மறுநாள் அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒலி மற்றும் காற்று மாசு குறித்து தரக்குறியீடு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறையும் தரக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
தரக் குறியீடு உணர்த்தும் தாக்கம் (காற்று மாசு)
- 0 - 50 வரையில் இருந்தால் காற்றின் தரக் குறியீடு (நல்லது) மிகக் குறைந்த தாக்கம் ஏற்படுத்தும்.
- 51 - 100 தரக்குறியீடு (திருப்திகரமானது) சிலருக்கு சிறிய அளவு சுவாச பிரச்சனை ஏற்படுத்தும்.
- 101 - 200 (மிதமானது) நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுத்தும்.
- 201 - 300 காற்றின் தரம் (மோசம்) நீண்ட நேரம் வெளியில் இருந்தால் பெரும்பாலானவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுத்தும்.
- 301 - 400 (மிகவும் மோசமானது) நீண்ட நேர வெளியில் இருந்தால் சுவாச நோய்கள் உருவாகலாம்.
- 401 - 500 (கடுமையானது) ஆரோக்கியமானவர்களையும் பாதிக்கும். முன்பே நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில், இந்த ஆண்டு காற்று மற்றும் ஒலி மாசு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், '' மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் முக்கியமான நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக 15 நாட்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளி அன்று 20.10.2025, தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்கும்.
பட்டாசுகளை வெடிக்கும் நேரத்தை 20.10.2025 காலை 06.00 முதல் 07.00 மணி வரையிலும், இரவு 07.00 முதல் 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவு மற்றும் ஒலி மாசு அளவை கண்டறிய பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தில் உள்ள பிரதான மாவட்டங்களில் காற்று மாசு 39 இடங்களிலும் மற்றும் ஒலி மாசு 34 இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை-7, கோயம்புத்தூர்-2, கடலூர்-2, மதுரை-2, திருநெல்வேலி-2, கன்னியாகுமரி-2, தஞ்சாவூர்-2, திருச்சி-2, வேலூர்-2, சேலம்-2, செங்கல்பட்டு-2, திண்டுகல்-2, கிருஷ்ணகிரி-2, தூத்துக்குடி-2, திருப்பூர்-2, நாகப்பட்டினம்-2 மற்றும் காஞ்சிபுரம்-2 ஆகிய இடங்களில் 13.10.2025 முதல் 27.10.2025 வரை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை காற்று மாசு
தீபாவளி நாளான 20.10.2025 அன்று, காலை 06.00 மணி முதல் மறுநாள் 21.10.2025 காலை 06.00 மணி வரை, காற்றுத்தர அளவு கண்காணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் காற்றுத்தர குறியீட்டு அளவு Air Quality Index (AQI) குறைந்தபட்சமாக பெசன்ட் நகர் 190 (AQI மிதமான அளவு) அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 332 வரை (AQI மிக மோசமான அளவு) என ஆய்வில் கண்டறியப்பட்டது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சென்னை பெசன்ட் நகர் 190 ( மிதமானது), தி.நகர் 273, திருவெற்றியூர் 207, திருவல்லிக்கேணி 227, சௌகார்பேட்டை 260, (மோசமானது) நுங்கம்பாக்கம் 326, வளரசவாக்கம் 332 என (மிக மோசமானது) அளவில் காற்றின் தரகுறியீடு பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு, சேலம், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமாரி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவில் உள்ளது.
ஒலி மாசு
இதே போல, தீபாவளி பண்டிகையன்று 20.10.2025 பெருநகர சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில் (மாலை 6 மணிமுதல் இரவு 12 மணி வரை) குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பெசன்ட் நகர் 62.8 Leq Db (A), தி.நகர் 71.8 Leq Db (A) ,நுங்கம்பாக்கம் 83.1 Leq Db (A), திருவல்லிக்கேணி 84.7 Leq Db (A), திருவெற்றியூர் 88.4 Leq Db (A), சௌகார்பேட்டை 82.2 Leq Db (A), வளரசவாக்கம் 72.4 Leq Db (A) ஒலி மாசு பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கடந்த தீபாவளியன்று அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கத்தில் 287 என்ற அளவில் காற்றின் தரம் மோசமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதே வளரசவாக்கத்தில் 332 ஆக காற்றின் தரக் குறியீடு மிக மோசமான அளவாக மாறியுள்ளது.
சென்னையில் கடந்த முறை குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 என்ற அளவில் காற்று மாசு இருந்த நிலையில், இந்த முறை குறைந்தபட்சமே பெசன்ட் நகரில் 190 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட காற்றின் மாசு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அதிகபட்ச அளவாக ஒலி மாசு சென்னை நுங்கம்பாக்கத்தில் 78.7 db என்ற அளவில் பதிவாகி இருந்தது. குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 59.8 db என்ற அளவில் பதிவாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 62.8 dB(A), அதிகபட்ச அளவாக ஒலி மாசு திருவொற்றியூரில் 88.4 dB(A) கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒலி மாசும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.