☰
×

புதிய தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அஷுதோஷ் தீக்ஷித் நியமனம்..!

 

விமானப்படையின் தலைமை தளபதியாக ஏர் சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங் உள்ளார். இவர் அக். 31ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, தற்போது விமானப்படையின் துணை தலைமை தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அஷுதோஷ் தீக்ஷித், புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1986 டிசம்பர் 6ல் விமானப்படையின் போர் விமானப் பிரிவில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

40 ஆண்டுகளாக விமானப்படையில் பணியாற்றி வரும் இவர், புதிய வகை போர் விமானங்களை சோதனை செய்து இயக்கிய அனுபவம் பெற்றவர். விமானப் பயிற்றுனராகவும் பணியாற்றியுள்ளார். தேசிய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவரான தீக்ஷித், வங்கதேசத்தில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சியை முடித்துள்ளார். டில்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லுாரியிலும் படித்துள்ளார்.

‘மிராஜ் -2000, மிக்’ ரக போர் விமானங்கள், ‘கிரண், ஜாகுவார், ஐ.எல்.-78, ஹாக்’ மற்றும் ‘தேஜஸ்’ உள்ளிட்ட பல்வேறு விமானங்களை இயக்கியுள்ளார். 3,500 மணி நேரத்துக்கும் அதிகமாக விமானங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர். விமானப் படையின், ‘ஆப்பரேஷன் சபேத் சாகர்’, ஆப்பரேஷன் ரக்ஷிக்’ மற்றும் ‘ஆப்பரேஷன் சிந்துார்’ ஆகிய நடவடிக்கைகளிலும் பணியாற்றியுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் இலகுரக போர் விமானமான தேஜஸ் உள்ளிட்ட விமானத் திட்டங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.