ஏர் இந்தியா விமானம் 300 அடி கீழே சரிந்தது
ஏன்? ஏர்பஸ் ஆய்வில் வெளியான 'திடுக்கிடும்' தகவல்..!
ஏன்? ஏர்பஸ் ஆய்வில் வெளியான 'திடுக்கிடும்' தகவல்..!
தாய்லாந்தின் ஃபுக்கெட் பகுதியில் இருந்து புதுடெல்லி நோக்கி ஏர் இந்தியா நிறுவனத்தின் AI2379 என்ற போயிங் விமானம் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி வந்து கொண்டிருந்தது. விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கியது. எதிர்பாராத நேரத்தில் விமானம் கீழே இறங்கியதால் அதில் பயணித்த 145 பயணிகளில் சுமார் 24 பயணிகள் மற்றும் பணிப்பெண்கள் காயமடைந்தனர்.
அடுத்த சில நொடிகளிலேயே விமானம் சரியாக இயங்க தொடங்கியது. இதையடுத்து விமானம் தரையிறங்கியதும் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, விமான விபத்து விசாரணை பணியகம் விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், ஏர்பஸ் நிறுவனம் இந்த விபத்து குறித்து வெளியிட்ட அறிவிக்கையில், விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பு இயந்திரம் சுமார் 4 விநாடிகளுக்கு செயல்பாட்டை இழந்தது தான் விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட விரிவான அறிக்கையில், “ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் ஃபுக்கெட்டில் இருந்து டெல்லி சென்ற AI2379 என்ற ஏர் இந்தியா விமானத்தில் சுமார் 4 நிமிடங்களுக்கு இயந்திர கோளாறு ஏற்பட்டது. அதாவது ஹைட்ராலிக் அழுத்தம் குறைந்ததன் காரணமாக எலிவேட்டர்கள் மற்றும் ஏலரான் மேற்பரப்புகள் சுமார் 4 விநாடிகளுக்கு செயலிழந்தன. அதாவது, இந்திய நேரப்படி காலை 9:32:44 மணிக்கு விமானத்தின் ஒரு ஹைட்ராலிக் இயந்திரம் தனது செயல்பாட்டை இழந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி 9:32:45 மணிக்கு இன்னும் இரண்டு ஹைட்ராலிக் இயந்திரங்களும் தனது செயல்பாட்டை இழந்தன. இந்த மூன்று இயந்திர கோளாறுகளும் இந்திய நேரப்படி, 9:32:51 மணிக்கு சரியாகியுள்ளது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் தான், விமானம் கீழ் நோக்கி இறங்கியுள்ளது.
கோளாறு ஏற்பட்டத்தை தொடர்ந்து, விமானத்தின் தலைமை விமானி, விமானத்தை கீழ் நோக்கி இயக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதை செயல்படுத்த முடியவில்லை. விமானம் திடீரென கீழ் இறங்கியதால், விமானத்தில் சீட் பெல்ட் அணியாமல் இருந்த சில பயணிகள் மற்றும் பணிப்பெண்கள் உட்பட சுமார் 24 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.