ஏர் இந்தியா விமான விபத்து: தவறான உடல் வழங்கப்பட்டதா..? பிரிட்டன் ஊடக செய்திக்கு இந்தியா மறுப்பு..!
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 261 பேரில், 52 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் உடல் பாகங்கள் கடுமையான வெப்பத்தால் கருகி, சிதைந்து போனதால் உடல்களை அடையாளம் காண்பதில் பெரும் சவால்கள் ஏற்பட்டன. இந்த நிலையில், பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடல்களில் அடையாளக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பிரிட்டனுக்கு அனுப்பப்பட்ட சவப்பெட்டி ஒன்றில், அடையாளம் தெரியாத பயணி ஒருவரின் உடல் இருப்பதாகவும், இதனால் இறுதிச் சடங்கு கைவிடப்பட்டதாகவும் செய்தி வெளியானது. ஒரே சவப்பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல்களின் பாகங்கள் இருப்பதாக மற்றொரு குடும்பம் புகார் தெரிவித்திருந்தது. பாதிக்கப்பட்ட பல பிரிட்டன் குடும்ங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விமான வழக்கறிஞர் ஜேம்ஸ் ஹீலி பிராட், "சிலர் தவறான உடல்களை பெற்றுள்ளனர். இது குறித்து அவர்கள் கலக்கமடைந்துள்ளனர். இரண்டு வாரங்களாக இது நடந்து வருகிறது. இந்த குடும்பங்களுக்கு விளக்கம் தேவை" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "துயரமான விமான விபத்தைத் தொடர்ந்து நிறுவப்பட்ட நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் உடல்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் அனைத்து உடல்களும் மிகுந்த தொழில்முறையுடனும் கண்ணியத்துடனும் உரிய மரியாதையுடனும் கையாளப்பட்டன. இந்த விவகாரத்தில் எந்த ஒரு கவலையை நிவர்த்தி செய்யப்படும். இதற்காக நாங்கள் இங்கிலாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.