×

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புத்தாண்டு ஆஃபர்: ரூ.1,850-க்கு விமான டிக்கெட்!

 

இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரண்டு புதிய விமான நிறுவனங்கள் களமிறங்கத் தயாராகி வருகின்றன. அல் ஹிந்த் ஏர் (Al Hind Air) மற்றும் ஃபிளை எக்ஸ்பிரஸ் (Fly Express) ஆகிய இரு நிறுவனங்களுக்கும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கியுள்ளது. இது இந்தியப் பயணிகளுக்கு, குறிப்பாக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. சமீபத்தில் இண்டிகோ விமான சேவைகளில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் அதிகப்படியான டிக்கெட் கட்டணங்கள் ஆகியவற்றால் அவதிப்பட்டு வரும் பயணிகளுக்கு, இந்தப் புதிய வரவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல் ஹிந்த் குழுமம், சுற்றுலா மற்றும் பயணத் துறையில் ஏற்கனவே ஒரு ஜாம்பவானாகத் திகழ்ந்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம்தான் 'அல் ஹிந்த் ஏர்' என்ற பெயரில் விமானச் சேவையைத் தொடங்கவுள்ளது. கொச்சியையைத் தலைமைத் தளமாகக் கொண்டு செயல்படவுள்ள இந்த நிறுவனம், ஆரம்பக்கட்டத்தில் ஏடிஆர்-72 (ATR-72) ரக விமானங்களைப் பயன்படுத்தித் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக, மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள சிறு நகரங்களை இணைக்கும் வகையில் இதன் சேவை இருக்கும். இதன் அடுத்தகட்ட இலக்குதான் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதாவது, விரைவில் வளைகுடா நாடுகளுக்கு, குறிப்பாகத் துபாய், ஷார்ஜா போன்ற இடங்களுக்கு மிகக் குறைந்த விலையில் விமானச் சேவையை வழங்க அல் ஹிந்த் ஏர் திட்டமிட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள், பண்டிகைக் காலங்களில் ஊருக்கு வர நினைக்கும்போது விமான டிக்கெட் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிடுகிறது. இந்தக் குறையைப் போக்கவே அல் ஹிந்த் ஏர் நிறுவனம், தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள டிராவல்ஸ் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், கேரளா மற்றும் தமிழகத்திலிருந்து வளைகுடா செல்லும் பயணிகளுக்கு மிகப்பெரிய பண மிச்சம் ஏற்படும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு இது பலத்த போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்ததாக, ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தயாராகி வரும் 'ஃபிளை எக்ஸ்பிரஸ்' (Fly Express) நிறுவனமும் மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஒரு வித்தியாசமான உத்தியைக் கையாளவுள்ளது. அதாவது, பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்லாமல், சரக்குகளையும் (Cargo) அதிக அளவில் கையாள்வதன் மூலம் லாபத்தை ஈட்டத் திட்டமிட்டுள்ளது. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை இணைத்துச் செயல்படுவதன் மூலம், டிக்கெட் விலையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று இந்நிறுவனம் நம்புகிறது. இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைப்பதே ஃபிளை எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புத்தாண்டுப் பரிசாக தனது பயணிகளுக்குப் குறைந்த விலையில் விமானப் பயணத்தை வழங்குகிறது. இந்தச் சலுகையின் கீழ் உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.1,950 முதலும், சர்வதேசப் பயணங்கள் ரூ.5,590 முதலும் தொடங்குகின்றன. குறிப்பாக, அதிக உடமைகள் இன்றிப் பயணிப்பவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'லைட் ஃபேர்' (Lite Fare) திட்டத்தில், உள்நாட்டுப் பயணத்திற்கு ரூ.1,850 மற்றும் சர்வதேசப் பயணத்திற்கு ரூ.5,355 என மிகக் குறைந்த ஆரம்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தச் சிறப்புத் தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வரும் ஜனவரி 1, 2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவின் மூலம் உள்நாட்டுப் பயணங்களை ஜனவரி 12, 2026 முதல் அக்டோபர் 10, 2026 வரையிலும், சர்வதேசப் பயணங்களை ஜனவரி 12, 2026 முதல் அக்டோபர் 31, 2026 வரையிலும் மேற்கொள்ள முடியும். 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்குக் கன்வீனியன்ஸ் கட்டணம் (Convenience Fee) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், இணையதளத்தில் நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கும் கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்குச் செலவைக் குறைக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.