×

#BREAKING : அதிமுக - பாஜக கூட்டணியில் தமாகா தொகுதிப் பங்கீடு நிறைவு: ஜி.கே. வாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்துள்ள ஜி.கே.வாசன், தனது கட்சிக்குக் குறைந்தபட்சம் 6 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் என உறுதியாக இருந்தார். குறிப்பாகத் தனது செல்வாக்கு மிகுந்த டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில முக்கியத் தொகுதிகளை அவர் எதிர்பார்த்தார். ஆனால், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பு, தமாகாவிற்கு வெறும் 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஜி.கே.வாசன் மற்றும் அவரது கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், சின்னம் விவகாரத்திலும் தமாகாவிற்கு நெருக்கடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமாகா தனது 'சைக்கிள்' சின்னத்தில் போட்டியிட விரும்பினாலும், பெரிய கட்சிகள் தங்களின் சின்னத்தில் போட்டியிடச் சொல்லி அழுத்தம் கொடுப்பதாகத் தகவல் வெளியானது.

தொகுதி பங்கீடு திருப்திகரமாக இல்லையெனில், தமாகா தனித்து போட்டியிடும் வாய்ப்பும், அல்லது வேறு கூட்டணியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தொகுதி எண்ணிக்கை குறித்து சமூக உடன்பாடு எட்டப்பட்டதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக ஜிகே வாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "நேற்று இரவு, நான் சென்னையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தேன்.

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தொகுதிப் பங்கீடு கூட்டத்துக்கு அதிமுக அலுவலகத்துக்கு ஜி.கே. வாசன் வரவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.