அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் : சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி..!
சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்புவனத்தில் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட அஜித்குமார் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மடப்புரத்தில் அஜித்குமார் தாயாருக்கும், சகோதரர் நவீன்குமாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு குடும்பத்தார், அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். மறைந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடந்தது. அ.தி.மு.க. போராட்டத்தால் வேறு வழியின்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வேறுவழியின்றி தாக்குதலில் ஈடுபட்ட போலீசாரை கைது செய்துள்ளனர். அ.தி.மு.க.வின் அழுத்தம், போராட்டத்தால் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.
போலீசாருக்கு வந்த அழுத்தத்தால்தான் அஜித்குமார் தாக்கப்பட்டிருக்கிறார். காவல்துறை தாக்குதலின் பின்னணியில் யாரோ அழுத்தம் கொடுத்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இதுவரை 20 ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும். அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.