×

உதகை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் போராட்டம்

 

உதகை தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக தலைமை மீண்டும் பரிசீலனை செய்து உதகை தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவித்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தெரிவித்தார். இதில் மேற்கு மண்டல தொகுதியில் உள்ள உதகை சட்டமன்றம் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் உதகையில் உள்ள தலைமை அதிமுக அலுவலகத்தில் குவிந்தனர்.

அதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என்றதும் பெண் நிர்வாகி ஒருவர் அழுது கொண்டே அலுவலகத்திற்கு வந்தார். உதகை தொகுதி அதிமுகவிற்கு உறுதியாக கிடைக்கும் என அதிமுகவினர் கடந்த சில நாட்களாக உதகை தொகுதியில் தீவிர பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தொகுதி பங்கீட்டில் உதகை தொகுதி அதிமுகவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜகவிற்கு உதகை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது அதிமுகவினிடையே மிகுந்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் உதகையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் ஒன்று கூடி அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள உதகை தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் உடனடியாக தலைமை கழகம் மறுபரிசீலனை செய்து உதகை தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதிமுக அலுவலகம் முன்பு கூடியிருந்த அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.