"துரோகி விஜயபாஸ்கர் ஒழிக.."- புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்
சட்டமன்ற உறுப்பினர் பதவியை சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த நிலையில், புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு லட்டு வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர். சபாநாயகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக ஏற்கனவே 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், சி.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் சரிந்தது. 47 ஆக இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை தற்போது 42 ஆக சரிந்தது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள விஜயபாஸ்கர் ஓரிரு நாளில் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விராலிமலை எம்.எல்.ஏ பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பழனிவேல் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது "துரோகி விஜயபாஸ்கர் ஒழிக.." என்றும் அதிமுகவினர் முழுக்கங்களை எழுப்பினர்.