நடுரோட்டில் துப்பாக்கியுடன் தகராறு செய்த அதிமுக பிரமுகர்!
கடலூர் அருகே கை துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே உள்ள விலங்கல்பட்டு கிராமத்தை அடுத்து உள்ளது குழந்தைகுப்பம். இங்கு கிராவல் குவாரி நடத்தி வரும் அதிமுக பிரமுகரான கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபால் ஆகியாருடன் அதே பகுதியை சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கொஞ்சிகுப்பம் வினோத் என்பவர் கிராவல் குவாரி நடத்துவது சம்பந்தமாக இருவருக்கிடையே அடிக்கடி போட்டி ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று வினோத் தன் ஆதரவாளர்களுடன் குழந்தைகுப்பம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபால் ஆகியோரை குவாரி பகுதியில் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கிருஷ்ணமூர்த்தி மகன் கோபால் தான் வைத்திருந்த கை துப்பாக்கி கையில் எடுத்து மிரட்டி உள்ளார். லைசன்ஸ் அனுமதி பெற்ற கை துப்பாக்கி என்ற போதிலும் பொதுவெளியில் எடுத்து அதை பயன்படுத்துவது சட்ட விரோதமானது. இந்த நிலையில் அதிமுகவினர் இரு பிரிவுகளாக தகராறில் ஈடுபடுவதும், அப்போது கை துப்பாக்கியை காட்டி மிரட்டுவதையும் உடன் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்த பட காட்சிகள் தற்போது வைரலாக வளம் வருகிறது. இந்த படக்காட்சிகளை பார்ப்பவர்களை அச்சம் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு குழந்தைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 60), கடலூர் மேற்கு அதிமுக ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளராவார். அவரது மகன் கோபால் (வயது 36), கடலூர் கிழக்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராவார். இவர் தனக்கு உரிமத்துடன் உள்ள பிஸ்டலை காட்டி எதிர்தரப்பினரை மிரட்டி தாக்கியது சம்பந்தமாக நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.