×

அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத் கட்சியிலிருந்து நீக்கம் - இபிஎஸ் நடவடிக்கை..

 

அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.  

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 22ஆம் தேதி Lord of the drinks எனும் தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி வின் நிர்வாகி மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  அதன் பிறகு அதிமுக ஐ.டி.விங் நிர்வாகியான பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என அடுத்தடுத்த புகார்கள் கொடுக்கப்பட்டன.  இது தொடர்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக அதிமுக நிர்வாகி பிரசாத், அஜய் வாண்டையார் உட்பட நான்கு பேரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  பிரசாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் செந்தில்குமார், கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு  காவல் உதவி ஆய்வாளர் மணித்துரை உள்ளிட்ட பலரது உடந்தையுடன் மோசடியை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,  T. பிரசாத், (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.