×

அதிமுக தான் எங்கள் உயிர் மூச்சு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி..!

 
 கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களைசந்தித்தார். அப்போது

அதிமுக என்பது எங்கள் உயிர் மூச்சு, நாங்கள் பதவிக்காக செல்கின்றோம் என்று சிலர் பேசுகின்றனர். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். நானும், சி வி சண்முகமும் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்தக் கோரிக்கைகளை ஏற்று ஒன்றன்பின் ஒன்றாக பார்த்துக் கொள்ளலாம் என்று இபிஎஸ் கூறியுள்ளார்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும், அதுதான் எங்கள் நோக்கம். சில ஊடகங்கள் தவறாக, நாங்கள் பதவிக்காக தவெகவுக்கு ஆதரவளித்தோம் எனக் கூறுகின்றனர். அப்படி எல்லாம் கிடையாது. மக்கள் தவெகவை ஆதரித்தார்கள் என்ற அடிப்படையில், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தோம். தவெக தரப்பிலும் எங்களிடம் அதிமுகவினர் பதவி கேட்டு வரவில்லை என தெரிவித்துள்ளனர். திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் ஆதரவு கொடுத்தோம்," என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "சிவி சண்முகம் உட்பட அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை வளர்த்த கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் செய்வோம். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பொதுச் செயலாளரை சந்தித்து, அந்த கருத்து வேறுபாட்டை கலைந்துவிட்டு வந்துள்ளோம். மேலும் சிவி சண்முகம் தரப்பினரும், நாங்களும் ஒற்றுமையாக முடிவெடுத்துள்ளோம்," என்று வேலுமணி கூறினார்.

தமிழக வெற்றிக் கழக ஆதரவு நிலைப்பாடு தற்போதும் உள்ளதா என்று கேள்விக்கு, ”தேவையான கேள்விக்கு மட்டும் பதில் கூறுகிறேன்” என்று வேலுமணி பதிலளித்தார்.

மேலும், "புதிய அரசு இப்போது தான் பொறுப்பேற்றுள்ளது. தேர்தல் அறிக்கையில் நிறைய திட்டங்களை அறிவித்துள்ளனர். அதனை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவோம். கோயம்புத்தூர் உட்பட தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும், அப்படி இல்லையெனில் சட்டமன்றத்தில் வலிமையாக குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டில் குற்றங்கள் மற்றும் போதை கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது, இந்த அரசு அதனை தடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.