அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்ன விவகாரம்- தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் பதில் மனு
அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்ன விவகாரத்தில் சூரியமூர்த்தி அதிமுக அடிப்படை உறுப்பினர் இல்லை, ஆகவே அவரின் மனுவை தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது,இரட்டை இலை சின்னத்தை ஒதுக்ககூடாது உள்ளிட்ட கோரிக்கைகளோடு, முன்னாள் எம்.பி.ரவீந்திரநாத், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த விண்ணப்பங்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில், அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்டு சூரியமூர்த்தியின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுக்குழு குறித்து புகாரளித்துள்ள சூரியமூர்த்தி, அதிமுக அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அதனால் அவரது மனுவை விசாரிக்க கூடாது. மேலும், உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட சட்டப்படி அதிகாரமில்லை என தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.