“2-வது முறையாக சீட் கிடைக்காத விரக்தி”- மேடையிலேயே விழுந்து கண்ணீருடன் வெளியேறிய அதிமுக நிர்வாகி
கள்ளக்குறிச்சி அதிமுகவில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ராஜினாமா கடிதம் வழங்கிவிட்டு தரையில் விழுந்து வணங்கி சோகமாக வெளியேறிய நகரச் செயலாளர் பாபுவால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்ட மேடையிலேயே மாவட்ட செயலாளரிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கிய நகர செயலாளர் பாபு, மிகுந்த மன வருத்தத்தில் உள்ளதால் தான் இனி பணியாற்ற விரும்பவில்லை என கண்ணீர் மல்க கூறி மேடையிலேயே விழுந்து கையெடுத்து கும்பிட்டு வெளியேறினார். மன உளைச்சலில் உள்ளதால் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளராக ராஜீவ்காந்தி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தன் மனைவிக்கு இரண்டாவது முறையாக சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த பாபு, தொடர்ந்து நகர செயலாளராக பணியாற்ற விரும்பவில்லை எனவும், தானும் தனது மனைவி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட மகளிர் அணி செயலாளருமான அழகுவேல் பாபு ஆகிய இருவரும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறோம் என கண்ணீர் மல்க மேடையில் கையெடுத்து கும்பிட்டு ராஜினாமா கடிதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் வழங்கிவிட்டு மேடையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார்.