×

சசிகலா மீது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார்- எழுத்து பூர்வமாக விளக்கமளிக்க உத்தரவு

 

சசிகலா மீதான  புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறை பதில் அளிக்குமாறு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தான்தான் என்று வதந்தி பரப்பியதாக சசிகலா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்  தான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று பொதுமக்கள் மத்தியில் சசிகலா தன்னை பிரபலப்படுத்தி வருகிறார். கட்சியின் உறுப்பினரே அல்லாத அவர் கட்சியின் கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்திவருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி எம்ஜிஆரின் சமாதிக்கு அதிமுக கொடியுடன் சென்ற சசிகலா அங்கு தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று பேட்டி அளித்தார்,

இதனால் சசிகலா மீது மோசடி, வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்ததாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஜெயக்குமார் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு  சைதாப்பேட்டை  17-வது மாஜிஸ்திரேட் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சசிகலா மீது  புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்ற விவரத்தை வரும் 20 ம் தேதி எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு உத்தவிட்டுள்ளார்.