மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பொதுக்கூட்டம் - அதிமுக அறிவிப்பு
மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அதிமுக சார்பில் வருகிற 25ம் தேதி வீரவனக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25-ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும். அன்னைத் தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் 25.1.2024 - வியாழக் கிழமை அன்று, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் "வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.