“விஜய் கிங் மேக்கர்... அதிமுக கூட்டணி சுமார் 80 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்”- கருத்துக்கணிப்பில் தகவல்
தவெக கூட்டணி 28.82 சதவீத வாக்குகள் பெறும் என்று கருத்துக் கணிப்பி தெரியவந்துள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கிங்மேக்கராக இருப்பார் என்றும் அதிமுக கூட்டணி சுமார் 80 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று இலயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் IPDS ( இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் ) அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், 2026 சட்டமன்ற தேர்தலில் யார் முதல்வர் ஆவார் என்று கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு முக ஸ்டாலின் மற்றும் விஜயை பெரும்பாலானோர் தேர்வு செய்ததாகவும் இரண்டாம் இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதை அடுத்து அண்ணாமலை, சீமான், கனிமொழி, உதயநிதியை பொதுமக்கள் தேர்வு செய்ததாக அவர் கூறினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கிங்மேக்கர் ஆக இருப்பார் என்று தெரிவித்த அவர், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத தேர்தல் களமாக 2026 சட்டமன்ற தேர்தல் இருக்கும் என்று அவர் கூறினார்.மேலும் , 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம்பாக்காளர்கள் 39 சதவீதம் பேர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் , தவெக கூட்டணி 28. 82 சதவீத வாக்குகள் பெரும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிப்பதாக அவர் கூறினார். தமிழக வெற்றிக்கழகத்துடன் எந்த கட்சியும் கூட்டணி செல்லாத நிலையில் தவெக கூட்டணி என்ற பெயரில் எப்படி முடிவுகளை அறிவித்தீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் உடன் கூட்டணி செல்லும் என்ற அனுமானத்தில் கருத்துக் கணிப்பு நடத்தியதாக அவர் கூறினார். கருத்துக் கணிப்பு முடிவுகள் முழுக்க முழுக்க தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாகவும், ஒருதலைபட்சமாகவும் உள்ளதாக செய்தியாளர்கள் கூறியதற்கு பதில் அளிக்காமல் மழுப்பினார்.