×

விவசாய மின் இணைப்பு... 2018 வரையிலான விண்ணப்பங்கள் - முக்கிய அப்டேட்!

 

தமிழ்நாடு மின்சார வாரியம் சாதாரணம் மற்றும் சுயநிதி (self financing) ஆகிய 2 பிரிவுகளில் விவசாய மின் இணைப்புகளை வழங்குகிறது. சாதாரண பிரிவில் மின்சாரம், மின்வழித் தடங்கள் அமைக்க தேவையான கம்பம், வயர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டுமே இலவசமாக வழங்கப்படும். மின்வழித்தட செலவுக்கான கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். இதற்காக, விவசாயிகளிடமிருந்து ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

ஆனால், இந்த கட்டணத்தைவிட மின்வழித் தடம் அமைக்க அதிகம் செலவாகிறது. இதன் காரணமாக, சுயநிதி பிரிவில் தத்கல் என்ற விரைவு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்கு மோட்டார் பம்ப் திறனுக்கு ஏற்ப ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, விவசாய மின் இணைப்பு கோரி 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில், 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த செப்டம்பரில் தொடங்கி வைத்தார். 

இத்திட்டத்தின் கீழ் சாதாரண பிரிவில் 40 ஆயிரம், சுயநிதி பிரிவில் 60 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதாரண பிரிவில் 2007ஆம் ஆண்டு வரையும், சுயநிதி பிரிவில் 2013ஆம் ஆண்டு வரையும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. அதேநேரம், தத்கல் திட்டத்தில் பதிவு மூப்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் முழு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், விண்ணப்பித்த நபர்களின் மறைவு போன்ற காரணங்களால் பலருக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு பதிலாக மற்றவர்களுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் கூடுதல் சலுகையாக, சாதாரண பிரிவில் 2007ஆம் ஆண்டுக்கு பதிலாக 2013ஆம் ஆண்டு வரையிலும், சுயநிதி பிரிவில் 2013ஆம் ஆண்டுக்கு பதிலாக 2018ஆம் ஆண்டு வரையிலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.