பேரூர் பட்டீஸ்வரத்தில் ஆகம விதி மீறல்- குருக்கள் உட்பட இருவர் பணியிடை நீக்கம்
கோவை பேரூர் பட்டீசுவரர் கோவிலில் இரவு நிறுவத்தில் காவல்துறை உயர் அதிகாரியை சாமி கும்பிட அழைத்துச் சென்ற, எலக்ட்ரிசியன் வேல்முருகன் மற்றும் சாமிநாதன் குருக்கள் ஆகிய இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறை அதிகாரியான பாண்டியராஜன் சாமி கும்பிட வந்துள்ளார். கோவில் நடை சாத்திய நிலையில் அவரை கோவில் எலக்ட்ரிசியன் வேல்முருகன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்துள்ளார். சாமி கும்பிடும் பொழுது அவருக்கு சாமிநாத குருக்கள் திருநீறு மற்றும் பிரசாதங்கள் போன்றவற்றை வழங்கி இருக்கின்றார்.
கோவிலில் நடை அடைக்கப்பட்ட பின் காவல் துறை அதிகாரி பாண்டியராஜனை தரிசனம் செய்ய அழைத்துச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் இது சர்ச்சையானது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். மருதமலை கோவில் துணை ஆணையரும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தக்காருமான செந்தில்குமார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து காவல் துறை அதிகாரி பாண்டியராஜனை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்த பேரூர் கோவில் எலக்ட்ரிசியன் வேல்முருகன், மற்றும் சாமிநாதன் குருக்கள் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.