மீண்டும் மீண்டுமா..? இன்றும் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..!
ஐ.யூ.எம்.எல் கட்சியில் இருந்து பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வான ஷாஜகானும், வி.சி.க சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினருமான வன்னியரசும் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மக்கள் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதலாவதாக, பதவியேற்றுக்கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஷாஜகான், ‘இறைவன் மீது ஆணையாக’ என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பதவியேற்ற வி.சி.க வன்னி அரசு, ‘உளமாற’ உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்விலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலாவதாக வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்ட பின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இந்நிலையில், இன்று பொறுப்பேற்ற இரு அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கி மக்கள் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வி.சி.க-வின் வன்னி அரசுக்கு சமூகநீதித்துறையும், ஐ.யூ.எம்.எல் ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.