ராஜீவ் காந்திக்கு பின் பிரதமர் மோடி தான்..! 40 ஆண்டுகால வரலாற்றை மாற்றியமைக்கும் நியூசிலாந்து பயணம்!
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியப் பிரதமர் மோடி அடுத்த வாரம் நியூசிலாந்திற்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகும்; மேலும் நியூசிலாந்தின் பொருளாதார செழிப்பிற்கு மிகவும் முக்கியமான நாடாகவும் அது திகழ்கிறது. ஏப்ரல் மாதம் கையெழுத்தான நியூசிலாந்து-இந்தியா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைந்தது. இந்த ஒப்பந்தம் நியூசிலாந்திற்கு அதிக வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தையில் ஏற்றுமதியை அதிகரிக்கப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்; இதன் மூலம் நியூசிலாந்து சமூகங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதோடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு ஊதியமும் உயரும். இவ்வாறு கிறிஸ்டோபர் லக்சன் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் ஜூலை 10ஆம் தேதி நியூசிலாந்து நாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளில் நியூசிலாந்து செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.பிரதமர் மோடி வரும் ஜூலை 10-ஆம் தேதி நியூசிலாந்தின் முக்கிய நகரமான ஆக்லாந்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு நாள் முழுவதும் பல்வேறு அரசு முறை நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் இந்தியா திரும்புகிறார்.இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே நீண்டகால நட்புறவு இருந்தாலும், உயர்மட்டத் தலைவர்களின் பயணம் நீண்டகாலமாக நிகழாமல் இருந்தது. கடைசியாக 1986-ஆம் ஆண்டு, அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி நியூசிலாந்திற்குச் சென்றார். அதற்குப் பிறகு, சரியாக 40 ஆண்டுகள் கழித்து இப்போது பிரதமர் மோடி நியூசிலாந்திற்குச் செல்கிறார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, நியூசிலாந்து பிரதமருடன் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளை பிரதமர் மோடி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.