☰
×

"90 காவலர்களின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு..." – பாழடைந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் சடலம்!

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலத்தை சேர்ந்தவர்கள் பெரியகருப்பன் - சத்யா தம்பதியினர். இவர்களுடைய 7 வயது மகன் முத்துவேல், கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி காலை 11 மணியளவில், அதே பகுதியில் உள்ள அடைக்கலம் காத்த அம்மன் கோயில் அருகே விளையாட சென்றுள்ளார். ஆனால், மாலை 4 மணி வரை சிறுவன் முத்துவேல் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறுவன் காணாமல் போனதை அறிந்த பெற்றோர் சிறுவனை, அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தேடியுள்ளனர். இருந்தபோதும், சிறுவன் கிடைக்காததால், சிறுவனின் தாயார் சத்யா, கீழவளவு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்துள்ளார். அதனடிப்படையில், கீழவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், சிறுவனை கண்டுபிடிப்பதற்காக 90 காவலர்கள் கொண்ட ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரவு முழுவதும் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 26) காலை தனியாமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவருக்கு சொந்தமான பாழடைந்த, ஆள் நடமாட்டமற்ற வீட்டிற்குள் சிறுவன் முத்துவேல் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சிறுவனின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் விசாரணையில், அக்டோபர் 25-ஆம் தேதி காலை 11 மணியளவில் கோயில் அருகே முத்துவேலும், அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, விளையாட்டாக அந்தச் சிறுவன், முத்துவேலின் கழுத்தில் கயிற்றை இறுக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறுவர்கள் இருவரும் ஓடியபோது முத்துவேலுக்குத் தலைசுற்றல் ஏற்பட்டு, கோயில் சுவரில் வாய் மோதியதில், முன்பக்கப் பற்கள் சேதமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தண்ணீர் கேட்பதற்காக அந்த 10 வயது சிறுவனின் வீட்டுக்குச் சென்ற முத்துவேல், அங்கு அச்சிறுவனின் தாய் சந்தியா (32) முன்னிலையில் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது சிறுவன் முத்துவேல் உயிரிழந்ததை அறிந்த சந்தியா, தனது மகனின் செயலால் ஏற்பட்ட சம்பவத்தை மறைக்கும் நோக்கில், முத்துவேலின் உடலைத் தனியாமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கத்துக்குச் சொந்தமான பாழடைந்த வீட்டில், மறைத்து வைத்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 10 வயது சிறுவன் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மேலும், சம்பவம் தொடர்பான தடயங்களை அழிக்க முயன்றதாகக் கூறப்படும் சந்தியாவைக் காவல்துறையினர் கைது செய்து, சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.