×

59 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் நினைவு நாளில் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் -  எம்பி மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

 

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவின் சுருக்கம் வருமாறு;

1967 தான் தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி வகித்த கடைசி காலம். அதன் பிறகு, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியில் பங்கு பெற காங்கிரஸ் சுமார் 59 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பல காலங்களிலும் காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளுக்கு பலமுறை துணைநின்றது. திமுகவும் அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது.

குறிப்பாக 2006க்கு பிறகு திமுக (96) அரசு காங்கிரஸ் (38) ஆதரவில்தான் செயல்பட்டது. 2009ல் இடதுசாரிகளும் பாமகவும் கூட்டணியை விட்டு வெளியேறிய பிறகும், காங்கிரஸ் உறுதியாக நின்று அரசை நிலைநிறுத்தியது. ஆனால் இத்தனை ஆதரவுக்கும் பிறகும், காங்கிரஸுக்கு ஆட்சியில் உண்மையான பங்கு வழங்கப்படவில்லை.

2025 டிசம்பரில், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் அந்த சிந்தனையை முன்னெடுத்து, கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு மற்றும் கூட்டணி மரியாதை என்ற புதிய அரசியல் திசையை வழங்கினார்.
ஆனால் திமுக தலைமையே அந்த யோசனையை நிராகரித்து, "தமிழகம் கூட்டணி அரசியலை ஏற்காது" என்று வாதிட்டது. தமிழக மக்கள் அதற்கு வேறொரு பதிலை வழங்கினர். தவெக தலைவர் விஜய் மட்டும் தான் அன்று வெளிப்படையாக கூட்டணி ஆட்சி மற்றும் கூட்டணி மரியாதை குறித்து பேசினார். மக்கள் பழைய ஒற்றைக் கட்சி ஆதிக்க அரசியலை நிராகரித்து, அவரது தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த தருணத்தை இன்னும் உணர்ச்சிபூர்வமாக மாற்றுவது, 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்கும் இந்த நாள் முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவு நாளாக இருப்பதுதான். அது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல.ஒரு உணர்வு. ஒரு வரலாற்று தருணம்.

காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகியோர் விஜய் தலைமையிலான அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்கிறார்கள் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி. தமிழக மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இன்று, பல ஆண்டுகளாக எண்ணற்ற காங்கிரஸ் தொண்டர்கள் அனுபவித்த தியாகம், விசுவாசம், அவமதிப்பு மற்றும் பொறுமைக்கு ஒரு பதில் கிடைத்திருக்கிறது. இது தமிழக காங்கிரஸின் ஒரு அரசியல் தருணம் மட்டும் அல்ல. இந்திய காங்கிரஸின் புதிய அரசியல் மாதிரி. ஒரு புதிய தொடக்கம். புதிய தொடக்கம். புதிய நம்பிக்கை. கூட்டணிக்கு மரியாதை கொடுத்த முதல்வர் விஜய்க்கு பாராட்டுகள்.

இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.