×

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'புயல்கள்' : பொங்கல் வாழ்த்து சொன்ன புயலும் புயலும்..!

 

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காம்போவான பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். 'காதலன்', 'மனதை திருடிவிட்டாய்' போன்ற படங்களில் ரசிகர்களைச் சிரிக்க வைத்த இந்த ஜோடி, தற்போது சாம் ஆண்டன் (முன்பு சாம் ரோட்ரிக்ஸ் என குறிப்பிடப்பட்டது) இயக்கத்தில் நடித்து வருகிறது. பொங்கல் திருநாளான இன்று, நடிகர் பிரபுதேவா தனது எக்ஸ் (X) தளத்தில் வடிவேலுவுடன் இருக்கும் கலகலப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், "தை பிறந்தால் வழி பிறக்கும்.. உடற்பயிற்சி செய்தால் உடம்பு சிறக்கும்.. இப்படிக்கு புயலும் புயலும்" என்ற வாசகத்துடன், இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பிரபுதேவா தீவிரமாக உடற்பயிற்சி செய்ய, அருகில் இருக்கும் வடிவேலு தனது டிரேட்மார்க் உடல் மொழியால் (Body Language) காமெடி செய்வது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த 'புயல்கள்' மீண்டும் இணைந்துள்ளதால், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி எடிட்டராகவும் ஒப்பந்தமாகியுள்ளனர். சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் ஒன்றாகக் காணப்பட்ட இவர்கள், தற்போது படப்பிடிப்பிலும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பழைய பாணியில் இவர்களது காமெடி கலாட்டா மீண்டும் திரையில் அரங்கேறப் போவதை எண்ணி திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.