×

பழனிசாமி மீது ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு ஏன்? மூத்த வழக்கறிஞர் விளக்கம்

 

எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே தாக்கல் செய்திருக்க கூடிய அறிக்கை சட்டத்தின் முன் நிலைக்கத்தக்கது அல்ல என மூத்த வழக்கறிஞரும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர் இளங்கோ டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

எடப்பாடி கே.பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார்களை சிபிஐ விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ள நிலையில் மூத்த வழக்கறிஞரும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர் இளங்கோ டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “2017ம் ஆண்டு எடப்பாடி கே பழனிச்சாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சிபிஐ விசாரணை என்ற உத்தரவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சிபிஐ விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்திருக்கக் கூடிய அறிக்கையை அடிப்படையில் மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் 2018ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கை சட்டத்தின் முன் நிலைக்கத்தக்கது அல்ல. அதற்கான காரணம் இந்த வழக்கின் போது முதற்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட போது புகார் தாரரையோ அல்லது கடன் பெற்ற உலக வங்கி தரப்பிலானரையோ லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அழைக்கவில்லை எனவும் மாறாக எடப்பாடி கே பழனிச்சாமி நெருங்கியவர்களை அழைத்து விசாரணை நடத்தியதால் அந்த அறிக்கை சட்டத்தின் முன் நிலைக்கத்தக்கது அல்ல. மேலும் லஞ்சம் சார்ந்த வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில் ஒருவேளை சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் போது அவர்கள் நினைத்தால் மாநில புலனாய்வு பிரிவு அமைப்புக்கோ அல்லது காவல்துறையின் உயர் அதிகாரிகளை கொண்ட தனி விசாரணை அமைப்பு ஏற்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிடலாம்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகள் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு அந்த முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டு வருகிறது. திமுகவை பொருத்தவரை ஊழல் அற்ற ஒரு நிர்வாகம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை முக்கிய எண்ணமாகும்.  உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு மூலம் இவ்வழக்கு மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு செல்லக்கூடிய பட்சத்தில் முறைகேடு தொடர்பான விவரங்களை ஏற்கனவே ஆர் எஸ் பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழங்கி உள்ள நிலையில் இவ்வழக்கின் விசாரணை மூன்று அல்லது ஆறு மாதத்திற்குள் முடிக்கப்படும்” எனக் கூறினார்.