அதிமுகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்- தளவாய் சுந்தரம் புகைப்படத்தை செருப்பால் அடித்த மகளிர் அண்இ
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவிற்கு அதிக தொகுதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்தின் புகைப்படத்தை செருப்பால் அடித்து கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அணியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த நிலையில் இந்த 6 சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பில் நான்கு இடங்களில் பாஜகவும் ஒரு இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸும் ஒரு இடங்களில் அதிமுகவும் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நாகர்கோவில் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதற்கு நாகர்கோவில் அதிமுகவினர் இடையே கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், படுத்துக்கிடந்தாலே அதிமுக நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெறும். ஆனால் தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளையும் பாஜகவிற்கு கொடுக்க முன் வந்ததற்கு தளவாய் சுந்தரம் தான் காரணம் என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இன்று நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்பு அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் தளவாய் சுந்தரத்தின் புகைப்படத்தை கிழித்ததோடு செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரக்கூடிய நிலையில் அதிமுகவினர் பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.