“மக்களுக்கு நன்றி கூறியபின் முடிவை அறிவிப்பேன்”- விஜயபாஸ்கர்
அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் அதிமுகவிலேயே தொடர்வதா? அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதா அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைவதா? என அவரது ஆதரவாளர்கள் தொண்டர்கள் மற்றும் தொகுதி மக்களிடம் ஆலோசனை பெற்று அவர்கள் விருப்பப்படி முடிவை அறிவிப்பேன் என்று விஜயபாஸ்கர் தெரிவித்திருந்த நிலையில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் தற்பொழுது புதுக்கோட்டையில் நடைபெறும் அதிமுக கட்சி நிர்வாகியின் திருமண விழா உள்ளிட்ட பல்வேறு விசேஷங்களில் பங்கேற்றார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி தரப்பு என இரண்டு பிரிவுகளாக பிரிந்து பின்னர் ஒன்று சேர்ந்துள்ளது. இருப்பினும் அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவில்லை. இந்நிலையில் விஜயபாஸ்கர் தன்னுடைய இலுப்பூர் வீட்டில் நேற்று விராலிமலை சட்டமன்ற தொகுதி மக்கள் மற்றும் தனது ஆதரவாளர்களை சந்தித்து அதிமுகவில் தொடரலாமா அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் சேரலாமா என்பது குறித்து கருத்துக்களை கேட்டுள்ளார். மேலும் அரசியலில் இருந்து ஒதுங்கலாமா என்ற கருத்தையும் அவர் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் நேற்றைய தினம் தனது ஆதரவாளர்கள் தனது தொகுதி மக்கள் முடிவே என் முடிவு என்றும் அவர்களது முடிவை கேட்டு நாளைக்குள் நான் முடிவெடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் நேற்று இரவு திடீரென சென்னை சென்ற விஜயபாஸ்கர் இன்று காலை புதுக்கோட்டைக்கு திரும்பினார். புதுக்கோட்டைக்கு திரும்பிய விஜயபாஸ்கர் இன்று முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகி திருமண விழாவில் பங்கேற்ற விஜயபாஸ்கரை செய்தியாளர்கள் வழிமறித்து கேள்வி எழுப்பினர். அப்போது விஜயபாஸ்கர் கூறுகையில், விராலிமலை தொகுதி மக்களை இன்றும் நாளையும் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதை நான் முதல் கடமையாக பார்க்கின்றேன். நன்றி தெரிவிப்பு முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றேன். தற்போது வரை அதிமுகவில் தான் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை குறிப்பிடாமல் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் தான் பயணிக்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால் அதிமுகவில் தொடர்வதாக அவர் கூறவில்லை இன்று முகூர்த்த நாள் என்பதால் தொடர்ந்து பல்வேறு விசேஷங்களில் பங்கேற்று விட்டு இன்று மாலையும் நாளையும் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன் என்று தெரிவித்துவிட்டு நான் வாகனத்தில் செல்ல வேண்டும் வழி விடுங்கள் என்று தெரிவித்து விட்டு சென்றார்.