×

எடப்பாடி பழனிசாமி ரகசியமாக சபரீசனிடம் பேசி வருகிறார்- வைத்திலிங்கம் 

 

எடப்பாடி பழனிசாமி ரகசியமாக சபரீசன் இடம் பேசி வருகிறார், இது அவரது மனசாட்சிக்கு தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு சட்டமன்ற அதிமுக உறுப்பினருமான வைத்திலிங்கம், “எடப்பாடி பழனிசாமி ரகசியமாக சபரீசன் இடம் பேசி வருகிறார்.  இது அவரது மனசாட்சிக்கு தெரியும் . கள்ளச்சாராயம்  கண்டிக்கத்தக்கது, கள்ளச்சாராயம், விஷசாராயம் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது.   அரசு மெத்தனமாக இருந்து வருகிறது. நிவாரணம் என்பது கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. அரசியலுக்காக இதனை குறை கூற கூடாது.  

தற்போதைய சபாநாயகர் அப்பாவு விஜிலென்ஸ் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ராதாபுரம் தொகுதியில் கடற்கரை கிராமத்தில் மீன்வளத்துறை மூலம் பணி மேற்கொண்டதில் பல கோடி ரூபாய் அரசை ஏமாற்றி பெரும் ஊழல் செய்யப்பட்டுள்ளது, மேலும் வாக்கி டாக்கில் ரூ.12 கோடி ஊழல் குறித்து முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. ஊழலை பற்றி ஜெயக்குமார் பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி, அவர் 3 ஆண்டுக்குள் ராஜ்யசபா சீட் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பேசிவருகிறார். அவர் இனி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது. அவருக்கு அரசியல் எதிர்காலம் இனி கிடையாது.  நாங்கள் இணைந்து செயல்படுவோம் என அறிவித்திருப்பதைடுத்து  95 சதவீத அதிமுக தொண்டர்கள் வரவேற்று எங்கள் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். 

எடப்பாடி அணியினர் காசு கொடுத்து எங்களிடம் உள்ள ஒரு சிலரை அழைத்து கொண்டிருப்பதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. ஓபிஎஸ் விரைவில் சசிகலாவை சந்திப்பார்.  எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் எங்கள் பக்கம் வரும்போது சேர்த்துக் கொள்வோம். சொன்ன வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்த திட்டங்களை நிறுத்தியதால்  திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடிக்கு ஆதரவாக கூட்டம் போட்டுள்ளார். அவர் அவரது சொந்த ஊரான மன்னார்குடி தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள் . டெபாசிட் கூட மன்னார்குடி தொகுதியில் காமராஜால் வாங்க முடியாது. அதிமுக  ஒன்றுபட வேண்டும், மீண்டும் தலைவர் ஆட்சி, அம்மாவின்  ஆட்சி மலர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைவரும்  ஒன்றுபட வேண்டும்.  ஆனால் எடப்பாடி பழனிசாமி கட்சி அழிந்தாலும் பரவாயில்லை தான் தான் தலைமையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்” என்றார்.