"இது நமது மானப்பிரச்சனை! கோவை தெற்கு தொகுதியில் நாம் வெற்றிபெற வேண்டும்" - எஸ்.பி.வேலுமணி
கோவை தெற்குத் தொகுதி விஐபி தொகுதியாக மாறியுள்ளது. இந்தத் தொகுதியில் நாம் வெற்றிபெற வேண்டும். இது நமது மானப்பிரச்சனை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
கோவை தெற்குத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் முன்பு அறிமுகம் செய்து வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,“தெற்குத் தொகுதி விஐபி தொகுதியாக மாறிவிட்டது. ஆனால் அம்மன் அர்ஜுனன் எப்போதும் போலத்தான் இருக்கிறார். எந்த காலத்திலும் இது அதிமுக கோட்டை தான். இந்தத் தொகுதியின் இன்றைய எம்.எல்.ஏ சகோதரி வானதி சீனிவாசன் தான். அதனால் நமது வேட்பாளரின் வெற்றி உறுதி. எளிமையான எம்எல்ஏ என்றால் அது அம்மன் அர்ஜுனன் தான். கோவை மாவட்டத்திற்கு அதிகமான நாம் திட்டங்களைக் கொடுத்துள்ளோம். கோவையின் முக்கியத் தொகுதி தெற்குத் தொகுதி தான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்தத் தொகுதி தான் அதிக திட்டங்களைப் பெற்றது. அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தினோம். ஆட்சியர் அலுவலகத்தைப் புதுப்பித்தோம் நேரு ஸ்டேடியத்தை புதுப்பித்துக் கொடுத்துள்ளோம். கோவையில் உள்ள குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. கோவையில் பல மேம்பாலங்கள் அமைத்துள்ளோம். எல்லாமே இந்தத் தெற்குத் தொகுதிக்குள் வரும். எனவே இது விஐபி தொகுதி தான். நமது கட்சியினர் கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து, மரியாதை கொடுக்க வேண்டும். நமக்கு எதிரி திமுக தான். மக்கள் திமுக ஆட்சியை அகற்ற நினைக்கிறார்கள். எங்கு சென்றாலும் மீண்டும் அதிமுக வரவேண்டும் என்று கூறுகின்றனர். அனைவரும் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். 20 நாட்கள் கடினமாக பணியாற்ற வேண்டும். இது நமது மானப்பிரச்சனை. தெற்குத் தொகுதியில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் வெற்றிபெற வேண்டும். பெண்கள் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். எனது ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்.
திமுக இந்த 5 ஆண்டுகளில் எந்தத்திட்டத்தையும் செய்யவில்லை. நமது திட்டங்களை ரிப்பன் வெட்டித் திறந்துவைத்தார்கள். சொத்துவரி, பால், மின் கட்டணம், கட்டுமானப் பொருட்கள் விலைகளை உயர்த்தியதே திமுக அரசின் சாதனை. போதைப் பழக்கங்களால் இளைஞர்கள் கெட்டுப்போய்விட்டனர். எங்கும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போலீசார் வேலை செய்வதே இல்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் பாதுகாப்பு என்று கோவை மக்களுக்கு தெரியும். கண்டிப்பாக எடப்பாடி முதல்வராவார். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். கோவை வடக்கு தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கோவை மக்கள் தாமரைச் சின்னத்திற்கு வாக்களிப்பார்கள். பாஜக எதுவும் செய்யவில்லை என்று திமுக சொல்கிறது. அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை மத்திய அரசு கொடுத்தது. ரூ.63,000 கோடியில் மெட்ரோ, 11 மருத்துவக்கல்லூரிகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் அதிகளவு வீடுகள் பெற்றுக்கொடுத்தோம்.அமெரிக்கா ஈரான் போரில் மற்ற நாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் பிரதமர் தலைமையிலான ஆட்சியில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை நாம் பாராட்ட வேண்டாமா? அதிமுக ஆட்சி வந்ததும் மீண்டும் பிரதமரிடம் கேட்டு தமிழகத்திற்கான திட்டங்களைப் பெற்றுத்தருவோம். தைரியம் இருந்தால் ஏதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்தினோம் என்று கூறி செந்தில்பாலாஜி வாக்கு கேட்கட்டும்” என்றார்.