“அதிமுகவில் பிளவு இல்லை! இன்றும் இபிஎஸ் தான் எங்களது பொதுச்செயலாளர்”- எஸ்.பி.வேலுமணி திடீர் பல்டி
அதிமுக தோல்வியை சரிசெய்வது குறித்துதான் ஆலோசனை நடத்தி வருகிறோம், அதிமுகவில் பிளவு என்பது இல்லை. கருத்து வேறுபாடுதான் உள்ளது. இன்றும் எங்களது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
சென்னை, எம்.ஆர்.சி.நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, காமராஜ், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய, முன்னாள் அமைச்சர் வேலுமணி, “புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களுக்கு வாழ்த்துகள். தமிழக வெற்றிக் கழகத்துடன் நாங்கள் அமைச்சர் பதவிக்காக பேசி வந்ததாகவும், ஏமாற்றம் எனவும் தொடர்ந்து சில பத்திரிகைகள் தொலைக்காட்சி ஊடகங்கள் பேசி வருகின்றனர். சி.வி.சண்முகமோ, நானோ பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது ஒருமுறை கூட அமைச்சர் பதவி குறித்து பேசவில்லை. தவெகவும் நாங்கள் அமைச்சர் பதவி கேட்கவில்லை என தெளிவுப்படுத்திவிட்டது. ஆனால், எங்களுக்கு கெட்டப் பெயர் உண்டாக்க வேண்டும் என இந்தக் கருத்தை பரப்புகின்றனர். எங்களைப் பொறுத்தவரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு உள்ளது. திமுக எதிர்ப்பு என்பதன் அடிப்படையில் எங்களைப் போலவே மக்களை சந்தித்தனர். மக்கள் ஆதரவு அடிப்படையில்தான் தவெகவிற்கு சட்டப்பேரவையில் ஆதரவளித்தோம் என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம்.
அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதனை சரிசெய்வது குறித்துதான் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதிமுகவில் பிளவு என்பது இல்லை. கருத்து வேறுபாடுதான் உள்ளது. இன்றும் எங்களது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தோல்வி குறித்து விவாதிக்கவே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கூறுகிறோம். சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தை பதவிக்காக ஆசைபட்டு நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்கள் மீது ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் தவறான எண்ணம் பரப்பப்படுகிறது. அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்களான அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், அம்மா குடிநீர், 7.5% இடஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்துள்ளோம். அதனடிப்படையிலேயே ஆதரவு தெரிவித்தோம். அதிமுகவின் கட்சி அலுவலகத்தை நாங்கள் கைப்பற்ற போவதாக பரப்புகின்றனர். அதுவும் தவறான தகவலே. அதிமுகவின் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தி, மறு ஆய்வு மேற்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக உள்ளது. தலைமுறை தலைமுறையாக கட்சியில் உள்ளோம். மீண்டும் அதிமுக ஆட்சியமைய வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அதிமுக தோல்வி குறித்து ஆராய்வோம். கட்சியை உடைக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்கிற எண்ணம் எங்களிடம் இல்லை” என்றார்.