“தவறான முடிவுகளால் தொடர் தோல்வி! தவெகவுடன் கூட்டணி வாய்ப்பை பயன்படுத்தல” - இபிஎஸ் மீது சரமாரி குற்றச்சாட்டு
கடந்த மூன்று தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி எடுத்த தவறான முடிவுகளால் தான் அதிமுக இன்று பலவீனமாக உள்ளது. பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் மற்றும் எஸ்பி வேலுமணி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் மற்றும் எஸ்பி வேலுமணி எழுதியுள்ள கடிதத்தில், “நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அ.இ.அ.தி.மு.கழகத்தில் கழக பொதுச் செயலாளராகிய நீங்கள் கழகத்தை வழிநடத்திச் செல்வதில் எடுத்த தவறான முடிவுகளால், இருவேறு கருத்துக்கள் காரணமாக 47 கழக சட்டமன்ற உறுப்பினர்களில், 25 கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக பொதுச் செயலாளர் அவர்கள், திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடுத்த தவறான முடிவை சுட்டிக்காட்டி மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் கொள்கை வழியில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் TTV அவர்களுடன் கூட்டணி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் சென்னையில் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், OPS அவர்கள் ஒத்துக்கொண்ட நிலையில் நீங்கள் அதை உதாசினப்படுத்தியதால் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அன்று TTV அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம், என்று நிராகரித்தீர்கள். 2019ல் அ.இ.அ.தி.மு.க தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது, நம்மோடு கூட்டணியாக இணைந்து பயணித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம் கட்சி மற்றும் தனி கட்சியாக இருந்த சரத்குமார் ஆகியோரை அரவணைக்காமல் 2021 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றினீர்கள்.
2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க டெல்லி தலைமை பலமுறை கூட்டணி வைக்க முயன்றும் கூட்டணியாக நம்முடைய அனைத்து கோரிக்கைகளையும் செய்வதாக கூறிய போதும் தன்னிச்சையாக முன்யோசனை இல்லாமல் செயல்பட்டதால் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற வலிய வாய்ப்பை வழங்கினீர்கள். அது மட்டுமில்லாது உங்களுடைய இந்த தவறான முடிவால் பல கழக வேட்பாளர்கள் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு கோடிக்கனக்கான ரூபாய் இழந்து நிற்கிறார்கள். அதுபோன்று பா.ம.க கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்த போதும், ஒரு மாத காலம் அதை உறுதி செய்யாமல் காலதாமதம் செய்த காரணத்தால் கூட்டணி வாய்ப்பை இழந்தோம், இப்படி தேடிவந்த பா.ஜ.க., பா.ம.க போன்ற கட்சிகளின் கூட்டணி வாய்ப்புகளை தன்னிச்சையாக நிராகரித்தீர்கள். அதேபோல் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பலமுறை பிரம்மாண்ட கூட்டணி அமைப்பதாக தெரிவித்ததோடு, கூட்டணிக்கு நம்மை நாடி வந்த தே.மு.தி.க மற்றும் புதிய தமிழகம் கட்சிகளை நம்மோடு இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியேற்றிவிட்டீர்கள். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால், 2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையிலிருந்து மீண்டுவரமாட்டோமா? என ஏங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்து வந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்கள், தாங்கள் தன்னிச்சையாக சுயநலத்தோடு திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாமலும், தங்களை தமிழக முதல்வராகவும், கழக பொதுச் செயலாளராகவும் அமர வைத்த கழகத்தின் மூத்த முன்னோடிகளை வெளியேற்றியும், புறக்கணித்தும், தேர்தல் கூட்டணி மற்றும் பிரச்சார வியூகங்கள் முன்னெடுப்பதில் கழக முன்னோடிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதால், கழகத்தினர் கடும் வேதனையோடும், துயரத்தோடும் மாற்றுக் கட்சியில் கூட்டம் கூட்டமாக தங்களை இணைத்து கொண்டு வருகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கழகம் தொடர்ந்து பலவீனப்பட்டு வரும் இந்த சூழ்நிலையிலும் சிறப்பாக கழகப் பணிகளில் செயல்பட்டு வந்த கோவை, திருப்பூர், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், தென்காசி, விழுப்புரம், திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி சார்பு அணி செயலாளர்கள், எந்தவித காரணங்களுமின்றி கழக பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்டு புதியவர்களை நியமித்து வருவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை, இது கழகத்தை மேலும் பலவீனப்படுத்தும் என்பதே உண்மை.
கழக பொதுச் செயலாளராகிய தாங்கள் கழக செயற்குழு, பொதுக்குழுவில் தங்களது கருத்துக்கு எதிராக யாரும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்க கூடாது என்று செயற்குழு, பொதுக்குழுவில் அனைவரின் பொதுவான கருத்தை வெளிப்படுத்தவும், தங்களது செயல்பாடுகளுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் கழகம் எந்த நிலைக்கு தாழ்ந்தாலும் நான் சொல்லுவதை மட்டும்தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மையில் இதுவரை 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை கழக சட்டத்திட்டங்களுக்கு முரணாக கழகத்திலிருந்து நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். தங்களால் நீக்கப்பட்டவர்கள் கழகம் துவங்கப்பட்ட 1972 ம் ஆண்டு முதல் கழக பணியாற்றியவர்கள் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் விசுவாசிகள், காலம் காலமாக, கழக வளர்ச்சிக்காக சிறை சென்று, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டும், கழகம் சந்தித்த அனைத்து பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்தவர்கள், குறிப்பாக 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு கூடுதல் வாக்குகளை பெற்றுத்தந்தும், கழக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கும் காரணமானவர்கள் ஆவார்கள். மேலும், அவர்கள் மறைந்த மாண்புமிகு எம்.ஜி.ஆர், மாண்புமிகு அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களான தலைவர்களின் மீதும், கழகத்தின் மீதும் மாறாத பற்றும் விசுவாசம் கொண்டவர்கள் கழகம் சோதனை காலத்தை எதிர் கொண்ட போதெல்லாம், தங்களோடு பயணித்தவர்கள். கழக வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர்கள் என்பதை எல்லாம் மறந்துவிட்டு கழகத்தை பலவீனப்படுத்தும் வகையில், கழக பொறுப்புகளிலிருந்து விலக்கி வைக்கப்படும் நடவடிக்கைகளை கழக பொதுச் செயலாளர் அவர்கள் மேலும் தொடரக்கூடாது. கழகத்தின் நலன் கருதி இதுவரை பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டுத் கே பொறுப்புகளில் நியமிக்கப்பட வேண்டும்.
உங்களை தமிழக முதல்வராக்கிய திருமதி. சசிகலா அவர்களும் மற்றும் அண்ணன் TTV தினகரன் அவர்களையும், அதேபோல கழகத்திலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் சேர்ந்தாலும் கூட அவர்களிடம் பேசி கழகத்தில் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு 4 ஆண்டு 8 மாதம் இருக்கிறது, ஆனால் உள்ளாட்சி தேர்தல் 6 மாதத்தில் வர உள்ளது, இதில் கிளை கழக செயலாளர் மற்றும் அடிமட்ட தொண்டன் வரை உள்ளாட்சி பதவிக்கு வருவார்கள், இது ரொம்ப முக்கியமானதாகும். இதற்கு கட்சியை பலபடுத்தியே ஆக வேண்டும். நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் குறித்தும், கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகள் குறித்தும் கழக பொதுச் செயலாளர் அவர்களால் மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், அழைக்கப்படுவதில்லை. சில மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மாநில, மாவட்ட, ஒன்றியங்களில் சிறப்பாக கழகப்பணியாற்றுபவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? அவர்கள் கலந்து கொள்ளாத வகையில் விலக்கப்படுகின்றனர். பொறுப்புகளிலிருந்து அ.இ.அ.தி.மு.கழகத்தினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உண்மையான அக்கறையும், ஈடுபாடும் இருக்குமே ஆனால் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் மறப்போம், மன்னிப்போம் என்கிற அடிப்படையில் கழக நலன் கருதி கழகத்தினரிடமிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளிப்படும் பொழுது அவற்றை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடன் 13.05.2026க்கு பிறகு கழகத்தின் பல்வேறு நிலைகளில் இன்று வரை பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டும், கழகத்தில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு அவர்கள் வகித்து வந்த பதவிகளை வழங்கி கழக பொதுச் செயலாளர் அவர்கள், கழகத்தை வலுபடுத்த முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.