×

அந்தியூர் தொகுதி தோல்விக்கு செங்கோட்டையன் காரணமா? - வெளியான ஆடியோ
 

 

அந்தியூர் தொகுதியில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைவதற்கு செங்கோட்டையன் தான் காரணம் என எடப்பாடி பழனிச்சாமி பேசியிருந்தார். இந்த நிலையில் செங்கோட்டையனின் பேட்டிக்கு பிறகு அவரது 2021 தேர்தலில் அதிமுக சார்பில் அந்தியூரில் போட்டியிட்ட சண்முகவேல் அவரின் மகன் மோகன் குமார் மற்றும் பர்கூர் அதிமுக நிர்வாகி ராயன் ஆகியோர் சில தகவல்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டனர்.மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இஎம்ஆர் ராஜா தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஆடியோ ஆதாரத்தையும் வெளியிட்டனர்.

இந்நிலையில் செங்கோட்டையன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பர்கூர் ஒன்றிய அதிமுக நிர்வாகி ராயன், “பத்தாண்டு காலம் பர்கூர் ஒன்றிய நிர்வாகியாக பணியாற்றி இருக்கிறேன் 15,000 வாக்குகள் கொண்ட பகுதி பர்கூர் சண்முகவேல் தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமித்தார். அங்கு பணியாற்றிய போது இஎம்ஆர் ராஜா என்னை அழைத்து அதிமுகவிற்கு எதிரான சில கருத்துக்களை தெரிவித்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பணியாற்ற சென்று விட்டேன். அதன் பிறகு நான் என்ன சொல்கிறேனோ அதை கேட்டு செயல்பட வேண்டும் என என்னை வற்புறுத்தினார். என் மனம் அதனை ஏற்கவில்லை, அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்து பணியாற்றினேன். அதேபோல் அப்போது மாவட்ட செயலாளராக இருந்த கேசி கருப்பண்ணன் தேர்தல் பணியாற்ற வரவில்லை” என்றார்.

தொடர்ந்து ராயன் வெளியிட்ட செல்போன் ஆடியோ பதிவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இஎம்ஆர் ராஜாவும் ராயனும் பேசிக்கொண்ட பதிவுகள் இடம் பெற்றிருந்தன. அதில் கைக்கு வந்து விட்டதா என பணத்தை குறிப்பிடாமல் கேட்கிறார். நான் சொன்னதை சரியாக ஃபாலோ செய்து கொள். கோட்டை விட்டு வந்து நிற்காதே! நிர்வாகிகளிடம் (பணத்தை) கொடுத்துவிட்டு யாருக்கும் தர வேண்டாம் என சொல். பிறகு கொடுக்கலாம் எனச் சொல்லி நிறுத்தி விடு . அவர்கள் உனக்கு கும்பிடு போடுவார்கள். சரியாக செய்து விடு... எல்லா பக்கமும் இதுதான் நடக்கிறது என பதிவாகி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இஎம்ஆர் ராஜா மீதும் அவருக்கு பதவி வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் நிர்வாகிகள் ஆடியோ ஆதாரத்துடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிவுகளை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.