×

“கற்பூரம் கரையலாம்? கட்சி கரையலாமா? கட்சி நிர்வாகிகளுக்குள் ஈகோ”- செம்மலை

 

நிலவி வரும் உட்கட்சி பூசலால் அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான செம்மலை அறிவித்துள்ளார்.

அதிமுக இரண்டாக உடைந்து கோஷ்டி பூசல் நிலவி வரும் நிலையில், அக்கட்சியில் இருந்து விலகுவதாக மூத்த நிர்வாகியும்  முன்னாள் அமைச்சருமான  செம்மலை சேலத்தில் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலும் அதிமுக இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு மூத்த நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் மூத்தநிர்வாகியான முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  

சேலத்தில் இன்று அழகாபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில்  செய்தியாளர்களை சந்தித்த செம்மலை கூறும்போது, “தேர்தலுக்குப்பிறகு அஇஅதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது. இதே மனநிலையில் தான், இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள். நடந்த சம்பவங்கள். நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கம், ஜெயலலிதா  அவர்கள் காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா? ‘‘கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா? நோகுதய்யா மனசு நோகுதய்யா என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே  ஆகும்.  உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது ,  பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எத்தனையோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள்.
  
இந்த நிலையில் அதிமுக பலவீனம் அடைந்து வருவது கவலை அளிக்கிறது.  இந்த கவலை தலைவர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் இருக்க வேண்டும். ஆனால் அவர்களின் ஈகோ இந்த கட்சியை சிதைத்து வருகிறது. யாருக்கு என்ன கருத்து உள்ளது என்பதை கலந்து உட்கார்ந்து பேசி இருக்க வேண்டும். ஆனால் அவர்களின் ஈகோ இந்த கட்சியை சிதைத்து வருகிறது. யாருக்கு என்ன கருத்து உள்ளது என்பதை கலந்து உட்கார்ந்து பேசவேண்டும். ஆனால் அது ஏன் நடக்கவில்லை என்று தான், என்னை போன்றவர்கள் வருத்தத்தில் உள்ளோம். இந்த இயக்கம் வளரவேண்டும். அது தான் தமிழ்நாட்டு அரசியலுக்கும், மக்களுக்கும் நல்லது. எனவே எனது விலகலுக்கு பிறகாவது கட்சியின் பொதுச்செயலாளரும், முக்கிய நிர்வாகிகளும் கலந்து பேசி, இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். எங்களது இயக்கத்தை பொறுத்தவரை எங்களுக்குள் ஒற்றுமை இருந்தால் போதும். கட்சி நன்றாக இருக்கும். தற்போது நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது. பிரிந்து நிற்பதில் சதி எதுவும் இல்லை. கட்சியை விட்டு பலர் சென்றுவிட்டனர். போனவர்கள் போக, எஞ்சியுள்ளவர்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இனிமேல் யாரையும் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது. கட்சிக்கு குந்தகம் விளைவிப்பவர்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது. தனது கட்டுப்பாட்டில் கட்சியை வைத்து நாட்டாமை செய்பவர்கள் யாரையும் கட்சியில்
ஏற்றுக் கொள்ளக்கூடாது. தனது கட்டுப்பாட்டில் கட்சியை வைத்து நாட்டாமை செய்பவர்கள் யாரையும் கட்சியில் அனுமதிக்க கூடாது. வேறு எந்த இயக்கத்திலும் இணையும் எண்ணம் எனக்கு இல்லை. என்னுடைய அரசியல் எதிர்காலத்தை காலம் தீர்மானிக்கும். வேறு கட்சிகளில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை. தவெக தலைவர் விஜய் , நமது இயக்கத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை. அந்த அளவிற்கு நம்மை வலுவானவர்களாக காட்ட தவறிவிட்டோம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.