×

சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பதே ஆளும் கட்சியினர்தான்- செம்மலை

 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது மதுரையில்  வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து, சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் ஐநூருக்கும்  மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மதுரை விமான நிலையத்தில்  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வாகனத்தில் பயணித்த போது,  அமமுக நிர்வாகி ஒருவர்  எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசி, செல்போன் மூலம் ஒளிபரப்பு செய்துள்ளார். இதனையறிந்த  அதிமுக கட்சி நிர்வாகிகள் அவதூறு பேசிய நபர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதனை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக மாநகர் மாவட்டம்  சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் , அதிமுக அமைப்புச் செயலாளருமான  செம்மலை கலந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார். இதில் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது பொய் வழக்கு போட்டு திமுக வஞ்சிப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர் மீது  போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஐநூறுக்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய செம்மலை, “தமிழகத்தில் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டுவிட்டது என்பதை குறிக்கும் விதமாகதான், மதுரையில் நடைபெற்ற சம்பவம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது  போடப்பட்ட வழக்குப் பொய் வழக்கு என்பது உறுதியாகிவிட்டது. எனவே அவர் மீது போட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்,  தவறு செய்தவர்களின் மீது  வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதே ஆளும் கட்சியினர்தான். திமுக கூட்டணி கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திமுக ஆட்சி குறித்து விமர்சித்துள்ளார். ஆட்சியாளர்களை குறைசொல்லி உள்ளார். ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி எதுவாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்களது கருத்துக்களையும், மாறுபாடுகளையும் குறிப்பிட்டு செல்வதில் எந்த தவறும் இல்லை” என்றார்.