×

“திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாது”- செல்லூர் ராஜூ

 

2026ல் தேர்தலில் உண்மையான ஹூரோ எடப்பாடி பழனிசாமி தான் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.


மதுரையில் விடியா ஆட்சி வீட்டு பில்லே சாட்சி பரப்புரையை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “வீடுவீடாக சென்று அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கேட்டு அவர்களிடம் திமுக ஆட்சியில் பொருட்களின் விலை உயர்வு குறித்து எடுத்துச்சொல்வோம். இனிமேல் தான் படமே காட்ட போகிறோம். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை சொல்லுவார்கள். 1%, 2% வரி போட்டார்கள். ஆனால் மாநில அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி உள்ளார்கள். அதிமுக ஆட்சியில் வெங்காயத்தின் விலை உயர்ந்த போது எகிப்தில் இருந்து வெங்காயத்தை வாங்கினோம்.  வடமாநிலத்தில் இருந்து பருப்பை வாங்கினோம். புளியை வாங்கினோம். வெளிமாநிலங்களில் இருந்து பொருட்களை வாங்கி குறைந்த விலைக்கு அடக்க விலைக்கு கொடுத்தோம். ஆனால் திமுக விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஒரிரு சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடுகிறது. இதனை தமிழகத்தின் விலைவாசி உயர்வுடன் ஒப்பீட வேண்டாம். திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளார்கள். திமுக ஆட்சியில் நிலவும் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இப்போது போர்க்குரல் எழுப்பி உள்ளார்கள். திருமாவளவன் போர்க்குரல் எழுப்பாமல் அமுங்கிவிட்டார். எங்கே போர்க்குரல் எழுப்பினால் விசிக கட்சியை திமுக இரண்டாக உடைத்துவிடுவார்களோ என திருமாவளவன் பயத்தில் உள்ளார். ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியை இரண்டாக உடைத்துவிட்டார்கள். திமுக ஹூரோவா ஜீரோவா என தெரியாது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். 2026 ல் திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாது. 2026 ல் தேர்தலில் உண்மையான ஹூரோ எடப்பாடி பழனிசாமி தான் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கூட்டம் தானாக சேர வேண்டும். கூட்டப்படும் கூட்டத்தில் மாநாட்டில் முதல்வர் பேசுகிறார். ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்பதை முதல்வர் யாரிடம் கேட்டார்.சாதாரண மக்களை சந்தித்து பேசினால் மட்டுமே மக்கள் பிரச்சினை தெரியவரும்” என்றார்.